/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளரில் 41 சதவீதத்தினர் நடுத்தர வயதினர்
/
வாக்காளரில் 41 சதவீதத்தினர் நடுத்தர வயதினர்
ADDED : மார் 22, 2026 09:56 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கான மொத்த வாக்காளரில், 40 - 49 மற்றும் 50 - 59 வயது வரையிலான வாக்காளரே, 41 சதவீதம் உள்ளனர். இவர்கள் கையிலேயே தேர்தல் வெற்றி இருக்கிறது.
கடந்த பிப். 23ல் வெளியான இறுதி பட்டியல் படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 9 லட்சத்து 44 ஆயிரத்து 178 ஆண்கள்; 10 லட்சத்து 10 ஆயிரத்து 853 பெண்கள்; 252 திருநங்கைகள் என, மொத்தம் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தின் மொத்த வாக்காளரில், 40 - 49 வயதுக்கு உட்பட்டோரே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; எட்டு தொகுதிகளிலும் நடுத்தர வயது பிரிவில், மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 73 வாக்காளர்கள் உள்ளனர். இது, மாவட்ட மொத்த வாக்காளரில், 21.27 சதவீதம்.
அடுத்ததாக, 50 - 59 வயது பிரிவில், 3 லட்சத்து 85 ஆயிரத்து 641 பேர் உள்ளனர். அதிக எண்ணிக்கையில், மூன்றாவதாக, 30 முதல் 39 வயது பிரிவில், 3 லட்சத்து 64 ஆயிரத்து 642 பேரும் உள்ளனர்.
நான்காவதாக, 20 - 29 வயதுக்கு உட்பட்ட, 3 லட்சத்து 34 ஆயிரத்து 804 வாக்காளரும்; ஐந்தாவதாக, 60 - 69 வயதுக்கு உட்பட்டோர், 2 லட்சத்து 49 ஆயிரத்து 375 பேரும் உள்ளனர். ஆறாவதாக, 70 - 79 வயது பிரிவில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 327 பேர் உள்ளனர்.
மாவட்டத்தில் முதல்முறை ஓட்டுப்பதிவு செய்யும் 18 - 19 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள், 39,541 பேர் உள்ளனர். அதேநேரம், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 39,880 பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை ஓட்டளிக்கும் 18-19 வயது வரையிலான இளம் வாக்காளரை பொறுத்தவரை, அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில், 7,601 பேரும்; திருப்பூர் வடக்கில் 7,064 பேரும் உள்ளனர். 3,617 ஆக மடத்துக்குளத்தில் 18-19 வயது வரையிலான வாக்காளர் குறைவாக உள்ளனர். அவிநாசியில், 5,243 பேரும்; உடுமலையில், 4,248; திருப்பூர் தெற்கில், 4,229; காங்கயத்தில், 3,894; தாராபுரத்தில், 3,645 வாக்காளர் இந்த வயது பிரிவில் உள்ளனர்.
மாவட்டத்தில், 40 - 49 வயதினர், 4 லட்சத்து 16 ஆயிரத்து 73 பேர்; 50 - 59 வயதினர், 3 லட்சத்து 85 ஆயிரத்து 641 பேர், என, இவ்விரு வயது பிரிவுகளில் மட்டும், மொத்தம் 8 லட்சத்து 1,714 வாக்காளர் உள்ளனர்; இது, மாவட்ட மொத்த வாக்காளரில், 41 சதவீதம். வயது அடிப்படையில் கணக்கிடும்போது, இவ்விரு வயது பிரிவினரே, சட்டசபை தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.
தொகுதி வாரியாக எண்ணிக்கை
தொகுதி வாரியாக பார்க்கும்போதும், காங்கயத்தில் 41,546; அவிநாசியில் 53,895; திருப்பூர் வடக்கு தொகுதியில், 72,251; திருப்பூர் தெற்கு தொகுதியில் 44,332; பல்லடத்தில், 72,770 என, ஐந்து தொகுதிகளில், 40 - 49 வயது வரையிலான நடுத்தர வயது வாக்காளரே அதிகம் உள்ளனர். தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும், 40 - 49 வயதினரை விட, 50 - 59 வயது வாக்காளரே அதிகம் உள்ளனர்.
தாராபுரத்தில் நடுத்தர வயதில் 42,753 பேர் உள்ளநிலையில், 50 - 59 வயதில், 44,095 பேர் உள்ளனர். உடுமலையில், நடுத்தர வயதினர், 46,351 பேர் உள்ளனர்; 50 - 59 வயதில், 46,712 பேர் உள்ளனர். மடத்துக்குளத்தில், 42,175 பேர் நடுத்தர வயதில் உள்ளனர்; ஆனால், 50-59 வயதில், 45,034 பேர் உள்ளனர்.
காங்கயத்தில், 43,730; அவிநாசியில், 46,613; திருப்பூர் வடக்கில், 59,919; திருப்பூர் தெற்கில், 37,659; பல்லடத்தில், 61,879 பேர், 50 - 59 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள்.

