/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறிய 47 கடைகளுக்கு ரூ.77 ஆயிரம் அபராதம்
/
விதிமீறிய 47 கடைகளுக்கு ரூ.77 ஆயிரம் அபராதம்
ADDED : மார் 18, 2025 04:02 AM
உடுமலை, : மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், விதிமுறைகளை கடைபிடிக்காத, 47 கடைகளுக்கு, 77 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
உணவகங்கள், டீக்கடை, பேக்கரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது.
இந்த ஆய்வில், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு முரணாக செயல்பட்ட 47 கடைகளுக்கு, 77 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் ஒருபகுதியாக உணவு விற்பனை நிறுவனத்தினருக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உணவுகளை பரிமாறுவதற்கும், பார்சல் செய்வதற்கும் வாழை இலலை பயன்படுத்தவேண்டும்.
சாம்பார், குருமா, சட்னி, காபி, டீ போன்ற சூடான பொருட்களை, பாலிதீன் கவர்களின் பொட்டலமிடக்கூடாது. டீக்கடைகளில், செய்தித்தாள்களில் பலகாரங்களை பொதிந்து கொடுக்க கூடாது.
பலகாரங்கள் தயாரிக்க தினமும் புதிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பழைய எண்ணெயை பயன்படுத்தக்கூடாது. பழைய எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்பதால், கெட்ட கொழுப்பு உருவாக வாய்ப்பு உள்ளது.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சேமித்துவைத்து, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தாரிடம் பயோடீசல் தயாரிப்பதற்கு வழங்கிவிடவேண்டும்.
கோடை காலம் என்பதால், குளிர் பானங்கள், ஜூஸ், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.