/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., 3ம் மண்டலத்துக்கு 5 சுற்று நீர்
/
பி.ஏ.பி., 3ம் மண்டலத்துக்கு 5 சுற்று நீர்
ADDED : டிச 03, 2024 07:11 AM
- நமது நிருபர் -
திருமூர்த்தி அணையில் இருந்து, இரண்டாம் மண்டலத்துக்கு ஐந்தாம் சுற்று தண்ணீரும்; மூன்றாம் மண்டலத்துக்கு, ஜன., மாதம் மூன்றாவது வாரத்திலும் தண்ணீர் திறந்து ஐந்து சுற்று வழங்க, திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு, பாலாறு புதிய ஆயக்கட்டுக்கு சமமாக நீர் பங்கீடு செய்து தரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதுள்ள தண்ணீரை பொறுத்தவரை, 11.6 டி.எம்.சி., தர இயலாது.
எனவே, இந்த முறை இருக்கும் தண்ணீரை வைத்து சமாளிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, மூன்றாவது மண்டலத்துக்கு, தண்ணீர் இருப்பை கணக்கீடு செய்து, 10 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் எனக்கூறியதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இரண்டாம் மண்டல பாசனத்தில், நான்காவது சுற்று வரும், 16ம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து, டிச., 17ம் தேதி முதல் ஐந்தாவது சுற்று தண்ணீர் வழங்கப்படும். அது, ஜன., இரண்டாவது வாரத்தில் நிறைவு பெறும்.
அதன்பின், ஒருவாரத்தில் கால்வாய் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, ஜன., மாதம் மூன்றாவது வாரத்தில், மூன்றாம் மண்டலத்துக்கு நீர் திறக்கவும், ஐந்து சுற்று தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது மண்டலத்துக்கு தண்ணீர் திறப்பு தேதி குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.