/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனிதர் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்
/
மனிதர் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்
ADDED : டிச 15, 2025 05:23 AM

திருப்பூர்: 'ஒவ்வொரு மனிதனும், அவரவர் வாழ்வில், குல தெய்வ வழிபாடு, தாய், தந்தையரை மதித்து நடக்கவேண்டும், சத் சங்கத்தில் பங்கேற்பது, தங்களால் இயன்ற சமூக சேவை செய்வது, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது ஆகிய ஐந்து விஷயங்களை கடைபிடிக்கவேண்டும்' என, யக்ஞராம தீக் ஷிதர் பேசினார்.
மார்கழி 1ம் தேதி, மஹா பெரியவரின் வார்ஷிக ஆராதனை தினம். இதையடுத்து, திருப்பூர், ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் 32வது வார்ஷிக ஆராதனை, நேற்று நடந்தது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு ஸ்ரீஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளின் ஆசியுடன், நேற்று மாலை, ஆராதனை நடைபெற்றது. மஹா பெரியவரின் பாதுகைக்கு அபிஷேகம், ஆராதனை செய்விக்கப்பட்டது.
'ஞானிகளின் முக்தி' என்கிற தலைப்பில்முசிறி யக்ஞராம தீக் ஷிதர் பேசியதாவது:
ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வத்தை கண்டிப்பாக வழிபட வேண்டும். வேதத்தில், குல தெய்வ வழிபாடு முதல் கடமையாக சொல்லப்பட்டிருக்கிறது. குல தெய்வத்தை வழிபட்டால்தான் நமக்கு ஏற்படுகின்ற பிரச்னைகள் தீரும்; மனதில் உள்ள கவலைகள் விலகி, வாழ்க்கை சீராகும்.
வேதத்தில், எல்லா நோய்களுக்கும் மருந்து உள்ளது. கர்மப்பிரயோகத்தில், எந்தெந்த நோய்க்கு, என்னென்ன மருந்து உள்ளது, நோய் எப்படி வந்தது; மருந்து வாயிலாக எப்படி குணப்படுத்த வேண்டும், பரிகாரங்கள் வாயிலாக குணப்படுத்துவது எப்படி என்கிற விவரங்களெல்லாம் இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனும், அவரவர் வாழ்வில், குல தெய்வ வழிபாடு, தாய், தந்தையரை மதித்து நடக்கவேண்டும், சத் சங்கத்தில் பங்கேற்பது, தங்களால் இயன்ற சமூக சேவை செய்வது, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது ஆகிய ஐந்து விஷயங்களை கடைபிடிக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். திரளான பக்தர்கள் பங்கேற்று, மகா பெரியவரை வணங்கினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

