/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மகிழ்ச்சி இ.பி.சி.ஜி., திட்ட விதிமுறை தளர்வு
/
5 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மகிழ்ச்சி இ.பி.சி.ஜி., திட்ட விதிமுறை தளர்வு
5 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மகிழ்ச்சி இ.பி.சி.ஜி., திட்ட விதிமுறை தளர்வு
5 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மகிழ்ச்சி இ.பி.சி.ஜி., திட்ட விதிமுறை தளர்வு
ADDED : மார் 15, 2024 12:37 AM

திருப்பூர்;திருப்பூர் பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினரின், இ.பி.சி.ஜி., விதிமுறை தளர்வு தொடர்பான ஐந்து ஆண்டு கால கோரிக்கை, தற்போது நிறைவேறியுள்ளது. இதனால், தொழில் துறையினர் மத்தியில் புன்னகை பூத்துள்ளது.
இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர், உலகளாவிய நாடுகளிலிருந்து அதிநவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து, உற்பத்தி திறனை பெருக்கிவருகின்றனர். இத்துறையினரின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, மத்திய அரசின் இ.பி.சி.ஜி., திட்டம் மிகவும் உறுதுணையாக உள்ளது.
இந்த திட்டத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு, சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. திருப்பூரில், பின்னலாடை உற்பத்திக்கு கைகொடுக்கும், நிட்டிங், டையிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, பல்வேறுவகை ஜாப்ஒர்க் பிரிவுகள் உள்ளன.
விதிமுறை மாற்றம்
இ.பி.சி.ஜி., திட்ட சலுகையை பயன்படுத்தி, பின்னலாடை ஜாப்ஒர்க் நிறுவனங்கள், சீரான இடைவெளியில், நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து, புதுப்பித்துவருகின்றன. இ.பி.சி.ஜி., திட்டத்தை பொருத்தவரை, இயந்திர இறக்குமதியின்போது வரி விலக்கு பெறும் தொகையைபோல் எட்டு மடங்கு தொகைக்கு நிகரான ஆடைஏற்றுமதியை, அடுத்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.
வெளிநாட்டு வர்த்தக கமிஷனரகம், கடந்த 2019, மார்ச் 29ம் தேதி, இ.பி.சி.ஜி., திட்ட லைசென்ஸில் உள்ள நிபந்தனைகளை மாற்றி உத்தரவிட்டது; நிட்டிங் உட்பட ஜாப்ஒர்க் கட்டண மதிப்பை, ஏற்றுமதி மதிப்பாக கணக்கிடுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2017, டிச., 5ம் தேதிக்கு முன் வரை லைசென்ஸ் வாங்கிய ஜாப்ஒர்க் நிறுவனங்களால், ஆறு முதல் எட்டு ஆண்டுகளில், எட்டு மடங்கு ஏற்றுமதி என்கிற நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இ.பி.சி.ஜி., விதிமுறையில் தளர்வு அளிக்ககோரி, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி ஜாப்ஒர்க் துறையினர் கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் முறையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் டில்லியில் உள்ள வெளிநாட்டு வர்த்தக கமிஷனரகத்தில், விதிமுறை தளர்வு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட 201 ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சக்திவேலுக்கு பாராட்டு
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக கமிஷனரகத்திலிருந்து விரைவில் அதிகாரிப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரி இறக்குமதி செய்த இயந்திரங்களுக்கு விலக்கு பெற்ற, பல லட்சம் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரியை செலுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.
சுங்க வரித்துறையினரால், வங்கி கணக்கிலிருந்து கைப்பற்றப்பட இருந்த பிணையத்தொகை திரும்ப கிடைப்பதாலும், ஜாப்ஒர்க் துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
'டெக்பா' சங்க தலைவர் ஸ்ரீகாந்த், 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், 'நிட்மா' செயலாளர் ராஜாமணி, கம்ப்யூட்டர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், இ.பி.சி.ஜி., திட்டத்தில் விதிமுறை தளர்வு பெற்றுத் தந்ததற்காக, 'பியோ' தலைவர் சக்திவேலை, சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

