/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை 2024ம் ஆண்டை விட அதிகம்
/
மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை 2024ம் ஆண்டை விட அதிகம்
மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை 2024ம் ஆண்டை விட அதிகம்
மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை 2024ம் ஆண்டை விட அதிகம்
ADDED : ஜன 02, 2026 05:47 AM
- நமது நிருபர் -: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கடந்தாண்டு, 75 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். முந்தைய ஆண்டைக் காட்டிலும், 13 லட்சம் பேர் அதிகம் வந்துள்ளனர்.
சற்றே இளைப்பாறி, குடும்பத்தினருடன் பொழுது போக்கி நேரம் செலவிட, திருப்பூர் மாவட்டத்தில், சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற இடங்கள் இல்லாமல் இல்லை; இருப்பினும், அவை இன்னும் பிரபலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன.
ஆன்மிக தலங்கள் உடுமலை மாரியம்மன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில், ஊத்துக்குளி - கதித்தமலை, வெற்றி வேலாயுதசுவாமி கோவில், தாராபுரம் அனுமந்தராயசுவாமி கோவில், காங்கயம் - சிவன்மலை சுப்ரமண்ய சுவாமி கோவில் உட்பட எங்கு நோக்கினும் கோவில்கள் சூழ்ந்திருக்கின்றன.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் ஆன்மிக தேடலை இங்குள்ள கோவில்கள் பூர்த்தி செய்கின்றன. அவ்வகையில், கோவில்களுக்கு, ஆண்டு முழுக்க பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடங்கள் திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில், இந்தாண்டின் புதிய வரவாக படகு குழாம், சிறுவர் பூங்கா அமைத்து சுற்றுலா முக்கியத்துவம் ஏற்படுத்தி வருகிறது, மாவட்ட சுற்றுலாத்துறை.
வனத்துறை பராமரிப்பில் உள்ள திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகளின் வசிப்பிடமாக மட்டுமில்லாமல், வெளிநாடு பறவைகளின் புகலிடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அதோடு, அமராவதி முதலை பண்ணை, திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி உள்ளிட்ட சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடங்களும் உள்ளன.
சுற்றுலா மேம்படுத்த குழு அரவிந்த்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் கூறியதாவது: பிற துறைகளின் கட்டுப்பாட்டில், சுற்றுலா தலங்கள் இருப்பினும், அங்கு சுற்றுலா மேம்பாடு பணிகள் மேற்கொள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழகம் முன்வந்திருக்கிறது. திருப்பூர் குமரன் நினைவிடம், உடுமலை நாராயணகவி நினைவிடங்களும் சுற்றுலா பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
''நம் மாவட்டத்தில் கோவில்கள், குளம், பறவைகள் சரணாலயம், பூங்கா என, 17 இடங்கள் உள்ளன. கடந்தாண்டு (2024), 62 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களாக அங்கு வந்து சென்றிருக்கின்றனர்; இந்தாண்டு (2025), 75 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர்''
சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில், ஆண்டிபாளையம் குளத்தில் பொங்கல் விழா, திருமூர்த்தி மலையில் உலக சுற்றுலா தின விழா, அமராவதி அணையில் துாய்மை முகாம் மற்றும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமராவதி அணை மேம்பாடுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, அரசு அனுமதியளித்திருப்பதுடன், நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இந்தாண்டு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட, 25 அரசு துறைகளை உள்ளடக்கிய இக்குழுவில் உறுப்பினர்கள் உள்ளனர்; சுற்றுலா மேம்பாடு சார்ந்த விஷயங்கள் குறித்து, இக்குழு அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்கிறது.

