/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை: கடந்த ஆண்டில் அதிகரித்த ஆர்வம்
/
சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை: கடந்த ஆண்டில் அதிகரித்த ஆர்வம்
சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை: கடந்த ஆண்டில் அதிகரித்த ஆர்வம்
சுற்றுலா தலங்களுக்கு 75 லட்சம் பேர் வருகை: கடந்த ஆண்டில் அதிகரித்த ஆர்வம்
ADDED : ஜன 01, 2026 05:24 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கடந்தாண்டு 75 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். முந்தைய ஆண்டைக் காட்டிலும், 13 லட்சம் பேர் அதிகம் வந்துள்ளனர்.
தொழில் நகரான திருப்பூர், இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலைக் கொண்டது. இதில், சற்றே இளைப்பாறி, குடும்பத்தினருடன் பொழுதுபோக்கி நேரம் செலவிட, மாவட்டத்தில், சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற இடங்கள் இல்லாமல் இல்லை; இருப்பினும், அவை இன்னும் பிரபலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன.
ஆன்மிக தலங்கள்
நிறைந்த மாவட்டம்
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில், ஊத்துக்குளி - கதித்தமலை, வெற்றி வேலாயுதசுவாமி கோவில், உடுமலை மாரியம்மன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் அனுமந்தராயசுவாமி கோவில், காங்கயம் - சிவன்மலை சுப்ரமண்ய சுவாமி கோவில் உட்பட எங்கு நோக்கினும் கோவில்கள் சூழ்ந்திருக்கின்றன. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் ஆன்மிக தேடலை இங்குள்ள கோவில்கள் பூர்த்தி செய்கின்றன. அவ்வகையில், கோவில்களுக்கு, ஆண்டு முழுக்க பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சூழல் சுற்றுலாவுக்கு
உகந்த இடங்கள்
திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில், இந்தாண்டின் புதிய வரவாக படகு குழாம், சிறுவர் பூங்கா அமைத்து சுற்றுலா முக்கியத்துவம் ஏற்படுத்தி வருகிறது, மாவட்ட சுற்றுலாத்துறை. வனத்துறை பராமரிப்பில் உள்ள திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகளின் வசிப்பிடமாக மட்டுமில்லாமல், வெளிநாடு பறவைகளின் புகலிடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு, அமராவதி முதலை பண்ணை, திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி உள்ளிட்ட சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடங்களும் உள்ளன.
சுற்றுலா பட்டியலில்
குமரன் நினைவிடம்
பிற துறைகளின் கட்டுப்பாட்டில், சுற்றுலா தலங்கள் இருப்பினும், அங்கு சுற்றுலா மேம்பாடு பணிகள் மேற்கொள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழகம் முன்வந்திருக்கிறது. திருப்பூர் குமரன் நினைவிடம், உடுமலை நாராயணகவி நினைவிடங்களும் சுற்றுலா பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
''நம் மாவட்டத்தில் கோவில்கள், குளம், பறவைகள் சரணாலயம், பூங்கா என, 17 இடங்கள் உள்ளன. கடந்தாண்டு (2024), 62 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களாக அங்கு வந்து சென்றிருக்கின்றனர்; இந்தாண்டு (2025), 75 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர்'' என்று கூறுகிறார், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார்.
---
ஆண்டிபாளையம் படகு குழாம்; நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்(பைல் படங்கள்)

