/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.எஸ்.ஐ. பயன்கள் குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு!: ஆங்கில புத்தாண்டில் களமிறங்கும் நிறுவனங்கள்
/
இ.எஸ்.ஐ. பயன்கள் குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு!: ஆங்கில புத்தாண்டில் களமிறங்கும் நிறுவனங்கள்
இ.எஸ்.ஐ. பயன்கள் குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு!: ஆங்கில புத்தாண்டில் களமிறங்கும் நிறுவனங்கள்
இ.எஸ்.ஐ. பயன்கள் குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு!: ஆங்கில புத்தாண்டில் களமிறங்கும் நிறுவனங்கள்
ADDED : ஜன 01, 2026 05:23 AM

திருப்பூர்: இ.எஸ்.ஐ. திட்ட பயன்களை, தகுதியான தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஆங்கிலப் புத்தாண்டில், விழிப்புணர்வு இயக்கங்களை மேற்கொள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலில், 'நிட்டிங்' துவங்கி, 'பேக்கிங்' வரை அனைத்து தொழில் பிரிவுகளும், இ.எஸ்.ஐ. - பி.எப். திட்டத்தில் இணைய தகுதி பெற்றவை. பத்துக்கும் அதிகமான தொழிலாளர் பணியாற்றும் தொழிற்கூடங்கள் அனைத்தும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணையலாம்.
திருப்பூரில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணையும் தகுதியை பெறுகின்றனர். இ.எஸ்.ஐ. திட்டத்தில், இரண்டு லட்சத்துக்கும் குறைவான தொழிலாளர் மட்டுமே இணைந்துள்ளனர்.
கோவை மண்டல அளவில், திருப்பூரில் இருந்துதான், இ.எஸ்.ஐ. திட்ட பங்களிப்பு அதிகம் கிடைக்கிறது; இருப்பினும், இ.எஸ்.ஐ. பதிவு செய்த தொழிலாளர் அத்திட்ட பயன்களை பெறுவது குறைவாக இருக்கிறது. ஆண்டுதோறும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இ.எஸ்.ஐ. திட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைவு என்பதால், இத்திட்டத்தில் பயன்பெறுவதும் குறைந்து போயுள்ளதாக, தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தொழிலாளர்களை இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைப்பதுடன், அத்திட்டத்தில் உள்ள பயன்களையும் தொழிலாளர்களுக்கு கொண்டு சேர்க்க, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் களமிறங்கியுள்ளது. இ.எஸ்.ஐ. அதிகாரிகள் அழைப்பை ஏற்று, திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை, ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஏற்றுமதி நிறுவனங்களில் உள்ள மனிதவள மேம்பாட்டு பிரிவு அலுவலர்களை அழைத்து சென்று, ஆங்கிலப் புத்தாண்டில், இ.எஸ்.ஐ. திட்டங்களை தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த களமிறங்கியுள்ளனர்.
இ.எஸ்.ஐ. திட்டம் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்து, ஏற்றுமதியாளர்கள் நேரில் கண்டறிந்து வந்துள்ளனர். நிறுவனங்களில் உள்ள, மனித வள மேம்பாட்டுப்பிரிவு அலுவலர்களை குழுவாக அழைத்துச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் குறித்து நேரில் விளக்க இருக்கிறோம்.
அவர்கள் வாயிலாக, தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இ.எஸ்.ஐ. திட்ட பங்களிப்பு இருந்தும், பயன்பாடு திருப்பூரில் குறைவாக இருக்கிறது; இனிவரும் நாட்களில், ஒவ்வொரு நிறுவனம் வாயிலாக விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும்.
- சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.

