/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிச்சாலை என்றொரு அறிவுச்சோலை கால் நுாற்றாண்டு கடந்தும் நீடித்த பந்தம்
/
பள்ளிச்சாலை என்றொரு அறிவுச்சோலை கால் நுாற்றாண்டு கடந்தும் நீடித்த பந்தம்
பள்ளிச்சாலை என்றொரு அறிவுச்சோலை கால் நுாற்றாண்டு கடந்தும் நீடித்த பந்தம்
பள்ளிச்சாலை என்றொரு அறிவுச்சோலை கால் நுாற்றாண்டு கடந்தும் நீடித்த பந்தம்
ADDED : மே 13, 2025 12:34 AM

எத்தனை வயதானாலும் பள்ளி வாழ்க்கை என்பது, வசந்தகாலம் தான். ஆசிரியர்களை குருவாகவும், அவர்களின் பிரம்படியை அறிவுரையாகவும் ஏற்று வளர்ந்த மாணவர்கள் தான், இன்று ஒழுக்கநெறியில் சிறந்து விளங்குகின்றனர். கல்விச்சாலையை, அறிவு தரும் சோலையாக கருதிய மாணவர்கள், பள்ளி படிப்பை முடித்து ஆண்டுகள் பல கடந்த போதிலும், தாங்கள் பயின்ற பள்ளி மற்றும் கற்பித்த ஆசிரியர்களை மறக்காமல் இருக்கின்றனர் என்பதும், அவர்களுக்கு மதிப்பு தர வேண்டும் என நினைப்பதும் தான் கல்வியின் மகத்துவம்.
அவ்வகையில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1998 - 2000ம் ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், பள்ளி படிப்பு முடித்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், முன்னாள் மாணவர் - ஆசிரியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்; சென்னை, பெங்களூரு என பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவ பருவத்து பசுமை மாறா நினைவுகளுடன், 150 பேர் குழுமினர். பரஸ்பரம் நட்பை பரிமாறி, நலம் விசாரித்துக் கொண்டனர்.
''ஆசிரியர்களின் கண்டிப்பை அறிவுரையாக ஏற்று, ஆசிரியர்களுக்கு பயந்து, கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் கல்வி பயின்றதால், இன்று, கணினி மென்பொருள் துறையிலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள், அரசு வக்கீல், சுய தொழில் என பல்வேறு துறைகளில் கால்பதித்து, வாழ்க்கையில் செழிப்புடன் செட்டில் ஆகியிருக்கிறோம்'' என பெருமிதத்துடன் கூறினர் முன்னாள் மாணவர்கள்.
இதில், 87 வயது நிரம்பிய முன்னாள் தலைமையாசிரியர் நஞ்சப்பன் கூறுகையில்,''உங்கள் கர்மவினை என்பது, உங்களது செயலை நீங்கள் சரியாக செய்து கொண்டே இருங்கள். அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்,'' என்றார்.
ஆங்கில ஆசிரியர் பழனிசாமி பேசுகையில், ''விவசாயம் உள்ளிட்ட எந்த தொழிலில் ஈடுபட்டாலும், அதில் 'அப்டேட்' செய்து கொள்வது, முன்னேற்றத்துக்கு உதவும்'' என்றார். தமிழாசிரியர் காந்தி பேசுகையில், ''குழந்தைகளுக்கு யாரும் தமிழில் பெயர் வைப்பதில்லை; தமிழை வளர்க்க வேண்டும்'' என ஆதங்கப்பட்டார்.
முன்னாள் ஆசிரியர் சிதம்பரநாதன், முன்னாள் கல்வி அலுவலர் நாராயணசாமி, அந்நாள் ஆசிரியர்கள் சுப்ரமணியம், சரவணபவன், தேன்மொழி, ஜெயந்தி, பேபி, வரதராஜன், பமிலாமேரி, சரோஜா, உடற்கல்வி ஆசிரியர் பழனிசாமி உட்பட பலரும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் வாயிலாக, ஒரு வகுப்பறை கட்டடத்துக்கு வர்ணம் தீட்டிக் கொடுத்தனர் முன்னாள் மாணவர்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் லாரன்ஸ், சுதா, கேசவமூர்த்தி, ஆனந்த், கார்த்திகேயன், திலகமணி, விசுவநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.