/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டாற்றை கடக்க பாலம் தேவை! இந்தாண்டு நிறைவேறுமா?
/
கூட்டாற்றை கடக்க பாலம் தேவை! இந்தாண்டு நிறைவேறுமா?
கூட்டாற்றை கடக்க பாலம் தேவை! இந்தாண்டு நிறைவேறுமா?
கூட்டாற்றை கடக்க பாலம் தேவை! இந்தாண்டு நிறைவேறுமா?
ADDED : ஜன 01, 2026 05:39 AM
உடுமலை: கூட்டாற்றை பாதுகாப்பாக கடந்து செல்ல இந்தாண்டாவது அரசு பாலம் கட்டித்தருமா என்ற எதிர்பார்ப்பில், தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனசரகத்திற்குட்பட்டது தளிஞ்சி மற்றும் தளிஞ்சி வயல் மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், தேனாற்றில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மலைவாழ் மக்கள், நெல், பீன்ஸ், மொச்சை உட்பட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
தங்கள் வாழ்வாதாரமாக உள்ள, விவசாய சாகுபடியில் கிடைக்கும், விளைபொருட்களை சந்தைப்படுத்த, வழித்தடம் இல்லாமல், வேதனையில் உள்ளனர்.
சமவெளிப்பகுதியான உடுமலை - மூணாறு ரோட்டிற்கு வர, கரடுமுரடான, பாறைகள் நிறைந்த, 6 கி.மீ., துாரத்திற்கான வழித்தடம் மட்டுமே உள்ளது.
இந்த வழித்தடத்தில், அமராவதி அணைக்கு பிரதான நீர்வரத்து உள்ள ஆறுகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகியவை ஒன்றாக இணையும் கூட்டாறு அமைந்துள்ளது. இந்த கூட்டாற்றில், தண்ணீர் அதிகரித்தால், மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், சமவெளிப்பகுதிக்கு வர முடியாமல், தவிக்கும் நிலை உள்ளது.
தண்ணீர் குறைவாக இருக்கும் போது, பல நுாறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரைமட்டப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில், கூட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அடிப்படை மருத்துவ தேவை மற்றும் ரேஷன் பொருட்கள், உணவு பொருட்கள் கூட கிடைக்காமல், கடுமையாக பாதித்து வருகின்றனர்.
மருத்துவ தேவைக்காகவும் இந்த வழித்தடத்தையே மலைவாழ் மக்கள் நம்பியுள்ளனர். அவசர சிகிச்சைக்கு வரும் போது, கூட்டாற்றை கடக்க பரிசலை அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தண்ணீர் வரத்து அதிகரித்தால், பரிசலையும் பயன்படுத்த முடியாது. கடந்தாண்டு மழைக்காலத்தில் ஆற்றை கடக்க முயன்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.
மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு செல்லும் வழித்தடத்தில், அமைந்துள்ள கூட்டாற்றை கடக்க, பாலம் அமைத்து தர வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
பல முறை பாலம் கட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தும், இதுவரை பணிகள் நடக்கவில்லை.
மலைவாழ் மக்கள் கூறுகையில், தளிஞ்சியில் விளையும் விளைபொருட்களை தலைச்சுமையாக சுமந்து சந்தைப்படுத்த எடுத்து வருகிறோம். ஆனால், கூட்டாற்றை கடப்பதில், அபாயம் உள்ளது.
எனவே கூட்டாற்றில் தரைமட்ட பாலம் அமைத்து கொடுத்தால், விளைபொருட்களை எளிதாக எடுத்து செல்வதுடன், அவசர சிகிச்சைக்கு செல்வோருக்கும் பயனளிப்பதாக இருக்கும். இந்தாண்டாவது எங்களது நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.

