ADDED : அக் 16, 2024 08:59 PM
உடுமலை : இணைப்பு ரோட்டில் பாலம் இல்லாததால் மழை காலங்களில், இரு கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
உடுமலை ஒன்றியம், ஆலாம்பாளையம் கிராமத்திலிருந்து கொங்கலக்குறிச்சிக்கு, 3 கி.மீ., தொலைவுக்கு, இணைப்பு ரோடு அமைந்துள்ளது.
இந்த ரோட்டை பல்வேறு கிராம மக்களும், தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களை எடுத்து செல்ல விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இணைப்பு ரோடு, வழித்தடத்தில், பவளபுரம் என்ற குடியிருப்பும் அமைந்துள்ளது. இந்நிலையில், இணைப்பு ரோட்டில், குறுக்கிடும் மழை நீர் ஓடையில், மழைக்காலங்களில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, இரு சக்கர வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடிவதில்லை.
எனவே, ஆலாம்பாளையம் அல்லது மடத்துார் வழியாக, பல கி.மீ., துாரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர தேவைக்கு கூட இணைப்பு ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால், இரு கிராம மக்களும் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
எனவே, உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர், ஓடையில் தரைமட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.