/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கன்றுக்குட்டி, 2 ஆடுகள் பலி தெருநாய்கள் அட்டகாசம்
/
கன்றுக்குட்டி, 2 ஆடுகள் பலி தெருநாய்கள் அட்டகாசம்
கன்றுக்குட்டி, 2 ஆடுகள் பலி தெருநாய்கள் அட்டகாசம்
கன்றுக்குட்டி, 2 ஆடுகள் பலி தெருநாய்கள் அட்டகாசம்
ADDED : டிச 11, 2025 04:54 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திலன், 38; விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரும் இவர், பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கால்நடைகளை கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு, துாங்கச் சென்றார். இரவு, 11.00 மணிக்கு, இவரது விளை நிலத்துக்குள் புகுந்த, 4 தெரு நாய்கள், கட்டிவைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டிகள் மீது தாக்குதல் நடத்தின.
நான்கு நாய்களும் சேர்ந்து கன்றுக்குட்டியை சுற்றி வளைத்துக் கடிக்க, 10 நிமிடங்களுக்கு மேல் உயிரை காக்க கன்றுக்குட்டி போராடியது. இருப்பினும், நான்கு நாய்களும் சேர்ந்து தாக்கி, கன்றுக்குட்டியை கடித்துக் குதறி இழுத்துச் சென்றன. இதில், கன்றுக்குட்டியின் தலை மற்றும் கால் பகுதி துண்டானது. அங்கிருந்த இரண்டு ஆடுகளையும் நாய்கள் வேட்டையாடின.
அதில், இரண்டு ஆடுகளும் உயிரிழந்தன. மேலும் ஒரு கன்றுக்குட்டியின் இரண்டு காதுகளையும், தெரு நாய்கள் கடித்துக் குதறி கவ்வி எடுத்துச் சென்றன. நீண்ட நேரம் கழித்து சத்தம் கேட்டு வந்த நித்திலன் குடும்பத்தினர், கன்றுக்குட்டி மற்றும் இரண்டு ஆடுகள் உயிரிழந்தது கண்டு சோகத்தில் ஆழ்ந்தனர். கால்நடை துறையினர் உயிரிழந்த கன்றுக்குட்டி மற்றும் ஆடுகளை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். காதுகள் கடிபட்ட நிலையில் இருந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
வேதனை தரும் உயிரிழப்பு: கோடங்கிபாளையம் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. தெருக்களில் வீசப்படும் கோழி, இறைச்சி கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள், வளர்க்கப்படும் ஆடு, மாடுகள், கோழிகளையும் ருசி பார்க்கின்றன. இவ்வாறு, தெரு நாய்களின் அட்டகாசத்தால், ஒரு கன்றுக்குட்டி உட்பட இரண்டு ஆடுகள் உயிரிழந்தது வேதனையாக உள்ளது.
- நித்திலன்: விவசாயி.:

