/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வளாகத்தில் நாய்களா? மேற்பார்வையிட உத்தரவு
/
பள்ளி வளாகத்தில் நாய்களா? மேற்பார்வையிட உத்தரவு
ADDED : டிச 11, 2025 04:54 AM
திருப்பூர்: பள்ளிகளில் நாய்கள் சுற்றித்திரிவது, மாணவர்களை துரத்தி கடிப்பது போன்ற செயல்கள் குறித்து தொடர் புகார்கள் கல்வித்துறைக்கு சென்றுள்ளது. கல்வித்துறை இணை இயக்குனரகம் தரப்பில் இருந்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும் படி சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம்:
மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவது மற்றும் உணவளிப்பதை தவிர்க்க தேவையான அறிவுரைகளை வழங்கி, ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி அறிவிப்பு பலகையில் தெருநாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டலாம். காலை இறைவணக்க கூட்டத்தில் தெருநாய் அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தகவலை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தெருநாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்கமும் இன்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க அறிவுரை வழங்க வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் துாய்மை, பராமரிப்பு முக்கியம். தெருநாய்கள் வளாகத்துக்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வை செய்ய அலுவலர் ஒருவரை நியமித்து, மேற்பார்வையிட வேண்டும்.
இவ்வாறு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாய்கள் பிடிக்கப்படும் பள்ளிகளில் சுற்றித்திரியும் நாய்கள், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பிடிக்கப்படும். பள்ளி கல்வி இணை இயக்குனரின் வழிகாட்டுதல் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. - புனித அந்தோணியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

