/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்கச் சந்தை மீண்டும் கைகூடுமென நம்பிக்கை!: பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காத்திருப்பு
/
அமெரிக்கச் சந்தை மீண்டும் கைகூடுமென நம்பிக்கை!: பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காத்திருப்பு
அமெரிக்கச் சந்தை மீண்டும் கைகூடுமென நம்பிக்கை!: பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காத்திருப்பு
அமெரிக்கச் சந்தை மீண்டும் கைகூடுமென நம்பிக்கை!: பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காத்திருப்பு
ADDED : டிச 11, 2025 04:53 AM

திருப்பூர்: வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழுவினர் இந்தியா வந்துள்ளதால், பரஸ்பரம் சுமூகமான உடன்படிக்கை ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர்.
அமெரிக்க பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை உயர்த்த, அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, ஏப். 2ம் தேதி, முதல்கட்டமாக 25 சதவீதமும்; இரண்டாம் கட்டமாக ஆக. 27ல் மீண்டும், 25 சதவீதமும் வரி அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த இறக்குமதி வரி, 10 சதவீதத்துடன், 'டேரிப்' உயர்வும் சேர்ந்து கணக்கிடப்படும் சூழல் ஏற்பட்டது.
105 நாளாக பாதிப்பு அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகம், பரஸ்பரம் அதிகரித்து வந்த நிலையில், திடீர்வரி உயர்வால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக. 27ல் துவங்கி, 105 நாட்களாக, ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒப்பந்தம் செய்த ஆர்டர்கள், அதிகபட்ச தள்ளுபடி சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. செப். மாதத்தில் இருந்து புதிய ஏற்றுமதி ஆர்டர் வருகை மந்தமானது. அதுவும், அக். மாதத்துக்கு பின், முடங்கி விட்டது.
ஊக்குவிப்பு திட்டம் அமெரிக்க வரி உயர்வு இரு மாதங்களில், வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது; அதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டதை உறுதி செய்த மத்திய அரசு, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், வங்கிக்கடன் மீதான வட்டி சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே, கடந்த செப். மாதத்தில் இருந்து, வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைத்து, பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அமெரிக்க குழு வருகை கடந்த அக். மாத இறுதியில், இந்தியா சார்பில் குழு, அமெரிக்கா சென்று வந்தது. நேற்று அமெரிக்க பேச்சுவார்த்தை குழு, இந்தியா வந்துள்ளது.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், உயர் அதிகாரிகள் அடங்கிய குழு, அமெரிக்க குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரஸ்பரம், எதிர்பார்ப்பு தீர்மானங்களை ஆராய்ந்து பார்த்து, அதற்கு ஏற்ப வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையுடன் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் காத்திருக்கின்றனர்.
முதல்கட்ட வரி விதிப்பின் போது, வங்கதேசம், வியட்நாம், பாகிஸ்தான், கம்போடியா போன்ற போட்டி நாடுகளை காட்டிலும், 5 முதல் 6 சதவீதம் மட்டுமே, இந்தியாவுக்கு வரி விதிப்பு அதிகமாக இருந்தது. இரண்டாம் நிலை வரி, 25 சதவீதம் சேர்ந்த பிறகு, எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதற்குப்பின், ஆர்டர் வர்த்தக பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளது.
புதிய சந்தை வாய்ப்புகளை ஆராயும் முயற்சி ஒருபுறம் துவங்கியுள்ளது; சர்வதேச கண்காட்சிகள் வாயிலாக அதற்கான முயற்சிகளை, ஏ.இ.பி.சி.,யும் செய்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அமெரிக்க சந்தை, இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மிகவும் கைகொடுத்தது. அதிகபட்ச ஆடைகளை கொள்முதல் செய்யும் ஆர்டர்களால், வர்த்தகமும் வளர்ச்சி பெற்றது.
அமெரிக்க சந்தை வாய்ப்பு கை நழுவினால், மீண்டும் வர்த்தகத்தை கைப்பற்ற நீண்ட நாட்களாகிவிடும். தொழில்துறையினரின் கோரிக்கைகளை, மத்திய அரசு நன்கு அறியும். அதன்படி, பேச்சுவார்த்தை மூலம், சுமூக தீர்வை உருவாக்க முயற்சிக்கிறது.
விரைவில், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்கும் வகையிலும், ஏற்கத்தக்க அளவு வரி விதிப்பு செய்ய வேண்டும்.
- திருப்பூர் பின்னலாடைத்துறையினர்.:

