ADDED : ஆக 31, 2025 12:11 AM

வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின், 111வது பிறந்தநாள் 'மனைவி நல வேட்பு விழா'வாக கொண்டாடப்படுகிறது.
திருப்பூர், பெரியார் காலனி மனவளக்கலை மன்றத்தில் நேற்று விழா நடந்தது. ஐம்பது தம்பதியர் பங்கேற்று கனி, மலர், மாலை பரிமாற்றம் செய்து கொண்டார்.
மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் முரளி, நம்முடன் பகிர்ந்தவை:
அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதர - சகோதரிகள் தினம் என அனைத்து உறவுகளுக்கும் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். மனைவி உறவு என்பது புனிதமானது. திருமணத்திற்கு முன் செல்லக் குழந்தைகளாக வளர்கிறார்கள். திருமணத்திற்கு பின் தன் பெற்றோர், உறவுகள், நண்பர்கள், பள்ளி, ஊர் என எல்லாவற்றையும் துறந்து கணவன் வீட்டுக்கு செல்கின்றனர்.
இது தியாகத்திற்கு உரியது. அத்தகைய உறவைக் கொண்டாடும் விதமாக ஒரு தினத்தை வேதாத்திரி மகரிஷி உருவாக்கியுள்ளார். 'நான் இந்தளவு ஒரு குருவாக, ஞானியாக வளர்வதற்குக் காரணம் என் மனைவியே. அவரைப் போற்றும்படி நன்றி பாராட்டவே இந்த நாள்,' என்று வேதாத்திரி மகரிஷி கூறியுள்ளார்.
அன்னை லோகாம்பாளின் 111வது பிறந்த நாள், மனைவி நல வேட்பு விழாவாக, வரும் செப்., 14ம் தேதி திருப்பூர் காலேஜ் ரோடு, சீனிவாசா மஹாலில் நடைபெற உள்ளது.
தம்பதியரிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் அவர்களது மனதிற்குள்ளேயே பதிந்து கிடக்கும். இவ்விழாவில் இருவரும் கண்கள் மூடி, கைகள் கோர்த்து தியானம் செய்வர். அப்போது கணவரோ மனைவியோ தனக்கு செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்க சொல்வோம். அப்படிச் செய்யும்போது நல்ல எண்ணங்கள் பரிமாறும்; உடலிலுள்ள காந்த ஆற்றல் பரிமாறப்படும்.
தம்பதியர் மத்தியில் இருக்கும் வெறுப்பு, பகை, கோபம் என்று அனைத்தும் கரைந்து, புத்துணர்வு உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
''பெற்றோரை,பிறந்தகத்தை, பிறந்த ஊரை விட்டுப் பிரிந்து வந்து பெருநோக்கில் கடமையறம் ஆற்ற, பற்றற்ற துறவியென குடும்பத் தொண்டேற்று, பண்பாட்டின் அடிப்படையில் எனைப்பதியாய் கொண்டு, என் நற்றவத்தால், என் வாழ்க்கைத்துணையாகி பெண்மை நல நோக்கில் அன்போடு கருணையினை கொண்டு மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன் மனைவியை நான் மதிக்கின்றேன்; வாழ்த்தி மகிழ்கின்றேன்'' என்று கூறுகிறார், வேதாத்திரி மகரிஷி. நிஜம்தானே!

