/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களின் சேவகனாக நெருங்கிய போலீஸ்
/
மக்களின் சேவகனாக நெருங்கிய போலீஸ்
ADDED : டிச 29, 2024 07:21 AM

கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் அத்துமீறல்...
திருப்பூர் மாநகர போலீசார் இந்தாண்டு சந்தித்த வழக்குகள் ஏராளம். குற்றங்களைத் தடுக்கவும் பெருமுயற்சி மேற்கொண்டனர். ஆனாலும், போதையில் நடந்த கொலை, முன்விரோதச் சண்டைகள் போன்றவை போலீசாருக்கு சவாலாக மட்டுமின்றி, சங்கடத்தையும் தந்தன.
கடந்த ஆக., மாதம் புதிய கமிஷனர் லட்சுமி வருகைக்கு பின், மாநகர போலீசார் பல அதிரடி நடவடிக்கைகள் சந்தித்தனர்.
வரவேற்பு பெற்ற 'டெடிகேட்டடு பீட்'
போதை பொருட்களை புழக்கத்தை கட்டுப்படுத்த, கிரைம் டீம், பழைய குற்றவாளிகளை கண்காணிக்க பிரத்யேகமாக தனிப்படைகளை அமைத்தார். பணியில் ஒழுங்கீனமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. மக்கள் எளிதாக போலீசாரை அணுக, 'டெடிகேட்டடு பீட்' ரோந்து முறையை அமல்படுத்தினர். 'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' மூலம் பள்ளி, குடியிருப்பு பகுதிகளில் பல விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பள்ளிகளில் மாணவ, மாணவியர் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டு, இளம் வயதினரை நல்வழிப்படுத்த ஸ்டேஷன் எல்லைக்குள் 'கிளப்'கள் துவக்கப்பட்டன. இவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
சாலைகள் சீராகாமல் நெரிசல் தடுப்பு சிரமம்
நகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, குமரன் ரோட்டில் விதிமீறல்களை குறைக்கும் வகையில் மையத்தடுப்பு அமைக்கப்பட்டது. சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கையை யோசித்து வருகின்றனர். நகரில் பிரதான ரோடுகளில் உள்ள ரோடு சரி செய்யப்படாமல் இருப்பதால், விபத்துகளை குறைத்து கட்டுப்படுத்துவது என்பது தற்போது வரை போலீசாருக்கு சவாலாக உள்ளது.
புதிய கமிஷனர் அலுவலகம் திறப்பு
கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த புதிய கமிஷனர் அலுவலகம், வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் சமீபத்தில் திறக்கப்பட்டது. மங்கலம் ஸ்டேஷன், மாநகர போலீசாருடன் இணைய அறிவிப்பு வெளியாகி, ஒன்றரை ஆண்டுக்கு பின் அதற்கான அரசாணை வெளியாகி மாநகரத்துடன் இணைந்து இயங்க ஆரம்பித்தது.
சைபர் குற்றங்கள் ஏமாறுவோர் அதிகம்
சைபர் குற்றங்களை பொறுத்தவரை அன்றாடம் போலீசார் பலவகை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், இன்னமும் பொதுமக்கள் ஏமாந்து வருவது போலீசாருக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. படிக்காதவர்களை காட்டிலும், படித்த நல்ல இடத்தில் உள்ள டாக்டர், ஐ.டி., சாப்ட்வேர் பொறியாளர் என பலரும் பல கோடிகளை ஏமாந்துள்ளனர். சில வழக்கில் குற்றவாளிகளை கைது மட்டுமே செய்ய முடிந்தது. பணத்தை மீட்க முடியவில்லை.
விபத்தில்லா ஆண்டாக வரவேற்க முடிவு
கடந்த ஜன., முதல் தற்போது வரை குற்றங்கள், விசாரணை, அதிகாரிகள் மாற்றம், புதிய திட்டங்கள் அமல் என, மாநகர போலீசில் பல மாற்றங்களை கண்டிருந்தாலும், வரும் புதிய ஆண்டிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், விபத்து, குற்றங்கள் இல்லாமல் இருக்க தேவையான விஷயங்களை திட்டமிட போலீசார் ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னெடுப்பாக, புதிய ஆண்டு துவக்கத்திலும் எவ்வித பிரச்னை இல்லாமலும், விபத்தில்லா ஆண்டாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். வரும் ஆண்டிலும், குற்றங்கள் இல்லாத மாநகரமாக மாற்ற தேவையான களப்பணியை மேற்கொள்வோம் என உறுதியாக உள்ளனர்.
இந்தாண்டைப் பொறுத்தவரை, மாநகர போலீசார் மக்களின் சேவகனாக நெருங்க முயற்சித்துள்ளனர். நுாறு சதவீதமும் இது சாத்தியமாக வேண்டும்; இது நிறைவேறுமா?

