ADDED : ஜன 02, 2025 11:15 PM
திருப்பூர்: கோவை சரகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளது. நான்கு மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், வாகன விபத்தை குறைப்பதிலும், சாலை பாதுகாப்பு சட்டங்களை அமல், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது, கிராம கண்காணிப்பு குழு தொடர்பான கூட்டங்கள் நடத்துவதில் கடந்த ஆண்டு போலீஸ் துறையினரின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில், குற்ற தடுப்பில், 39, சட்டம் - ஒழுங்கு வழக்கில், 39, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில், 21, கள்ளச்சாராய வழக்கில், 3 மற்றும் போதை பொருள் வழக்கில், 8 என மொத்தம், 110 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில், 723 மரணத்தை ஏற்படுத்திய விபத்து வழக்கு பதியப்பட்டது. ஆனால், பல்வேறு விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை மூலமாக, கடந்த ஆண்டு, 654 வழக்கு பதிவானது.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிந்து, மக்களின் பங்களிப்புடன், 3,136 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கிராம கண்காணிப்பு குழு மூலமாக, 1,111 கலந்தாய்வு கூட்டங்கள் கிராமங்களில் நடத்தப்பட்டது. அதில், போதை பொருட்கள் விற்பனைகளை தடுத்தல், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், குற்ற நடவடிக்கைகளை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்து, குற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

