/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலங்கோலமாக மாறிய அலங்கார செயற்கை நீரூற்று
/
அலங்கோலமாக மாறிய அலங்கார செயற்கை நீரூற்று
ADDED : மார் 15, 2025 11:47 PM
திருப்பூர்: கண்கள் காண்பதற்கு அழகினை வெளிப்படுத்த வேண்டிய அலங்கார செயற்கை நீரூற்றுகள் அலங்கோலமாக மாறி வருகின்றன.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், நகரில் உள்ள போக்குவரத்து ரவுண்டானாக்கள், காலியிடங்கள், மையத் தடுப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் அழகுபடுத்தும் விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் போக்குவரத்து ரவுண்டானாக்களில் அமைந்துள்ள புல்வெளி மற்றும் மலர்ச்செடிகள் காண்போர் மனதை அள்ளும் விதமாகவும், கண்டு மகிழ அழகிய செயற்கை நீரூற்று போன்ற அமைப்புகளுடனும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அவ்வகையில் திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ள இடத்தில் உள்ள போக்குவரத்து ரவுண்டானா, குமரன் வணிக வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் முன்புறம் உள்ள காலியிடம் ஆகியவற்றில் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பவர்கள் மனதுக்கு இனிமையை தரும் வகையில் ரம்மியமாக காட்சியளிக்க வேண்டிய இந்த நீரூற்றுகள் அருவெருப்பு ஏற்படும் வகையில் மாறி வருகிறது.அப்பகுதியில் சுற்றி வரும் நபர்கள் இந்த நீரூற்று அமைந்துள்ள இடத்தில் படுத்து புரள்வதும், பழைய துணிகள், மூட்டைகள் போன்ற கழிவுகளை கொண்டு வந்து அவற்றின் மீது பரப்பி வைப்பது போன்ற சம்பவங்களும் நடக்கிறது.
இது போன்ற நடவடிக்கைகள் தொடராத வகையில் உரிய கண்காணிப்பும், இந்த இடங்களில் உரிய பாதுகாப்பும் மேற்கொள்ள வேண்டும்.