UPDATED : நவ 04, 2026 10:41 AM
ADDED : நவ 04, 2026 10:36 AM

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புதிய ஆடைகளின் மணமும், விதவிதமான பலகாரங்களின் சுவையும், வானை பிளக்கும் வெடிகளின் சத்தமும் தான்.
இந்த வண்ணமயமான கொண்டாட்டங்களுக்குப் பின்னால், ஒருவேளை உணவிற்கோ அல்லது புதிய உடைக்கோ ஏங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளியோரும், ஆதர வற்றோர் காப்பகங்களில் வாழும் மனிதர்களும் நம் சமுதாயத்தில் இருக்கவே செய்கிறார்கள்.
‘‘சார்... அம்மா அப்பா இல்லாத பிள்ளைங்க சார்; ப்ளீஸ் தீபாவளிக்கு ஏதாவது உதவி செய்யுங்க...’’ என, தன்னார்வலர்கள் பலரும், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக கேட்கும் உதவியே இதற்கு சான்று.இத்தகைய எளிய மனிதர்களின் வாழ்விலும் பண்டிகை வெளிச்சத்தைப் பாய்ச்சும் உயரிய பணியை, ஆண்டுதோறும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், இளைஞர் அமைப்புகளும் அமைதியாக செய்து வருகின்றன.
தீபாவளி பண்டிகை நெருங்குவதற்கு, சில வாரங்களுக்கு முன்பிருந்தே இந்த தன்னார்வ அமைப்புகளின் பணிகள் விறுவிறுப்படைகின்றன. சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி அணுகுமுறைகள் வாயிலாக இரக்கமுள்ள மனிதர்களிடம் இருந்து நிதி, புதிய ஆடைகள், இனிப்பு மற்றும் மளிகைப் பொருட்களை நன்கொடையாக சேகரிக்கின்றனர்.
தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் காப்பகங்கள், மனவளர்ச்சி குன்றியோர் மையங்கள் மற்றும் வீடற்ற பிளாட்பாரவாசிகளை அடையாளம் கண்டு, அவர்களின் எண்ணிக்கை, தேவைகளை பட்டியலிடுகின்றனர்.
சேகரிக்கப்பட்ட உதவிகளை, பண்டிகை நாளன்றோ அல்லது அதற்கு முதல்நாளோ அவர்களோடு நேரத்தை செலவிட்டு, புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
பண்டிகைக் காலத்தில் செய்யப்படும் இந்த உதவிகள், வெறும் பசி ஆற்றுவதோடு நின்றுவிடுவதில்லை; அது பல சமூக மாற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது.பண்டிகை நாட்களில், ‘தங்களுக்கு யாரும் இல்லை’ என்ற ஏக்கத்தில் இருக்கும் ஆதரவற்றோருக்கு, ‘நாங்களும் உங்களுக்கு இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை இந்த இளைஞர்களின் கரங்கள் தருகின்றன.
‘நாம மட்டும் நல்லா இருந்தா போதாது, சுத்தி இருக்கிறவங்களும் சந்தோஷமா இருக்கணும்’ என்ற உயரிய தத்துவத்தை தீபாவளிக் கொடைகள் உணர்த்துகின்றன.
பட்டாசுகள் வெடித்துச் சிதறும் வெளிச்சத்தை விட, ஒரு ஏழை குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தீபாவளியின் உண்மையான பேரொளி. பண்டிகை, வியாபாரமயமாகி வரும் இக்காலத்தில், அன்பையும் மகிழ்ச்சியையும் இலவசமாகப் பகிர்ந்து கொள்ளும் இந்த தன்னார்வ அமைப்புகளின் பணி போற்றத்தக்கது.
இந்த தீபாவளி நாளில், வீடுகளின் வாசலில் விளக்கேற்றுவதோடு மட்டுமல்லாமல், இயன்றவரை ஒரு எளியவரின் வாழ்விலும் ஒளி ஏற்றுவதே சிறந்தது.
