/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்று நுாறு... இன்று தேர்ச்சிக்கே திண்டாட்டம்; அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர் இல்லாத அவலம்
/
அன்று நுாறு... இன்று தேர்ச்சிக்கே திண்டாட்டம்; அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர் இல்லாத அவலம்
அன்று நுாறு... இன்று தேர்ச்சிக்கே திண்டாட்டம்; அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர் இல்லாத அவலம்
அன்று நுாறு... இன்று தேர்ச்சிக்கே திண்டாட்டம்; அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர் இல்லாத அவலம்
ADDED : மே 26, 2025 11:34 PM

திருப்பூர்: திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் இல்லாததால், பிளஸ் 1, பிளஸ் 2வில் மாணவர்கள் மதிப்பெண் இழந்துள்ளதாக பெற்றோர் புகார் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவரான சகாயமேரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த பின் கூறியதாவது:
எனது மகன், சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளியில் படித்துவருகிறார். கடந்த 2023 - 24 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மொத்தம் 446 மதிப்பெண் பெற்றார். குறிப்பாக கணித பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றிருந்தார். இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 கணித பாடத்துக்கு, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும், ஜன., முதல் பணிக்கு வரவில்லை.
இதுகுறித்து, கல்வி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். ஆனாலும், கணித பாடத்துக்கு வேறு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. கணிதத்தில், அனைத்து பாடங்களும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2, கணித பாடத்தில் மாணவர்களின் திறன் குறைந்துள்ளது. பத்தாம் வகுப்பில், கணிதத்தில், நுாறு மதிப்பெண் வாங்கிய எனது மகன், பிளஸ் 1 தேர்வில், வெறும் 35 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதேபோல், பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு, கணித பாடத்தில் மதிப்பெண் இழந்துள்ளனர். மாணவர்களின் உயர் கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. வரும் கல்வியாண்டிலாவது, பிளஸ்1, பிளஸ்2 கணித பாடத்துக்கு, தகுதியான ஆசிரியரை நியமித்து, மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.
இது குறித்து, சி.இ.ஓ., உதயகுமாரிடம் கேட்டபோது, 'சின்னசாமியம்மாள் பள்ளிக்கு, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் கணித ஆசிரியர் நியமிக்கப்படுவார்,'' என்று கூறி முடித்து கொண்டார்.