/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவு; முதியவரை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
/
உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவு; முதியவரை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவு; முதியவரை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவு; முதியவரை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
ADDED : டிச 15, 2024 11:10 PM

உடுமலை; உடுமலை அருகே, உயிருடன் இருப்பவரை, வருவாய்த்துறையினர் இறந்ததாக பதிவு செய்து, முதியோர் உதவித்தொகையை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை தாலுகா ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சந்தனகருப்பனுார். இக்கிராமத்தை சேர்ந்தவர், மாரியப்பன், 90; இவர் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து மாரியப்பன் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
போதிய வருவாய் இல்லாத நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அவர் தவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பரிசோதிக்கும் போது, மாரியப்பன் இறந்து விட்டதால், உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த முதியவர், ஜல்லிபட்டி வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் நேரடியாகச்சென்று, தான் உயிருடன் இருப்பதையும், உதவித்தொகை நிறுத்தப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் உதவித்தொகை வழங்க, சமூகநலத்துறை தாசில்தாரிடம் ஆக., மாதத்தில் மனுக்கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை முதியோர் உதவித்தொகை மாரியப்பனுக்கு வழங்கப்படவில்லை.
வருவாய்த்துறையினரின் அலட்சியத்தால், உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவாகி, உதவித்தொகை நிறுத்தப்பட்டதும், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் பல முறை விண்ணப்பித்தும், அசராத வருவாய்த்துறையினரை கண்டித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவும் அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

