/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனம்' உருவாக தேவைப்படுகிறது 'மனம்'
/
'வனம்' உருவாக தேவைப்படுகிறது 'மனம்'
ADDED : டிச 08, 2024 02:37 AM

பல்லடம்: பல்லடம் வனம் அமைப்பின் வான்மழை கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது.
'வனம்' தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வனம் அமைப்பின் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணாதுரை கண்ணதாசன் பேசியதாவது:
நம் முன்னோர் விட்டுச்சென்ற எத்தனையோ பழைய பழக்க வழக்கங்களை நாம் மறந்துவிட்டோம். அவற்றையெல்லாம் மீட்டெடுத்து பழக்கத்துக்கு கொண்டுவர வேண்டும். உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில், 6 சதவீதம் மட்டுமே மழைக்காடுகளாக உள்ளதாக கூறப்படுகிறது. காடுகள் தன்னிடம் உள்ள எதையுமே மறைப்பதில்லை. வனம் உருவாக மனம் வேண்டும்.
நாம் மரக்கன்று நடுவது நமக்காக மட்டுமல்ல... நமது அடுத்த தலைமுறைக்கானது. முன்பெல்லாம், வாகன விபத்துகள் ஏற்பட்டால், வாகனங்கள் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றுதான் கேள்விப்படுவோம். ஆனால், மரங்கள் வெட்டப்பட்டதால், இன்று விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்தது, கட்டடத்துக்குள் பாய்ந்தது என்ற செய்திகளைத்தான் பார்க்கிறோம். நம் முன்னோர்கள் வாழ்க்கைக்கு ஏற்ப மரங்களை வகை பிரித்திருந்தனர்.
ஆலமரத்தின் அடிவேரை கரையான்கள் தின்றால் கூட அதன் விழுதுகள் மரத்தை காப்பாற்றும் என்பார்கள். மழை மற்றும் மழையின் முக்கியத்துவம் குறித்து இன்றைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் மனதார செய்யாமல் வெறும் விளம்பரத்துக்காக செய்யக்கூடாது. திருக்குறளில் இரண்டாவது அதிகாரமாக வான்மழை உள்ளது. கடவுளுக்கு அடுத்ததாக நீருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் திருவள்ளுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, எஸ்.கே.எம்., ஹனி நிறுவனர் செல்வகுமார் ஞானகுரு, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் ஆகியோர் பேசினர். 'வனம்' அமைப்பின் பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.