/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தேவை! உடுமலையில் அமைக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
/
பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தேவை! உடுமலையில் அமைக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தேவை! உடுமலையில் அமைக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தேவை! உடுமலையில் அமைக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 10, 2025 11:09 PM
உடுமலை; பல்வேறு தொல்லியல் சிறப்புகளையும், வரலாற்றுச்சின்னங்களையும் கொண்ட உடுமலை பகுதியில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பல்வேறு தொல்லியல் சின்னங்கள் மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்விலும் தொடர்ந்துகண்டறியப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அமராவதி ஆற்றுப்படுகையிலுள்ள பழங்கால கோவில்களில், நுாற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.
இதே போல், உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் வட்டாரத்தில், மேற்பரப்பு ஆய்வில், பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்றுச்சின்னங்கள் கிடைத்தன.
இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவம் அடிப்படையில், கொங்கல்நகரம் பகுதியில் அகழாய்வு செய்ய, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
தற்போது அகழாய்வு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாபட்டி பகுதியில் அணிகலன்கள் உட்பட தொல்லியல் பொருட்கள், முதற்கட்ட அகழாய்வில் கிடைத்து இப்பகுதியின் தொன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சிதிலமடைந்த கல்வெட்டுகள்
மேலும், பெருங்கற்காலம், சமணர்கள், சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தைச்சேர்ந்த சிலைகள், கல்வெட்டுகள் இரு தாலுகாவிலும் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைக்குட்பட்ட வனப்பகுதியிலும், கற்திட்டை, நடுகற்கள் பராமரிப்பின்றி உள்ளன.
போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பல நுாற்றாண்டு பழமையான சிலைகள் மற்றும் கல்வெட்டுகளை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் வகையில், உடுமலை பகுதியில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த, 2009ல் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, இம்மாவட்டத்தில், தொல்லியல்துறை சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க எதிர்பார்ப்பு நிலவியது.
கடந்த, 2018ல், அருங்காட்சியகம் இல்லாத திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட பல்வேறு தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இச்சின்னங்கள் முற்காலத்தின் வாழ்வியலையும், தொன்மையையும் வெளிப்படுத்துவதாகும்.
போதிய விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு இல்லாமல், இத்தகைய வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும்.
இதனால், அச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தற்போதைய தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். மேலும், கொங்கல்நகரம் அகழாய்வு திட்டத்தில் பெறப்படும் பொருட்களையும் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அவசியமாகும். இக்கோரிக்கையை அரசு பரிசீலித்து, திருப்பூர் மாவட்டத்துக்கான அருங்காட்சியகத்தை உடுமலையில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.