ADDED : டிச 26, 2024 11:45 PM

''எந்தப் பொருளையும் பாங்கா வச்சிக்கோணும் கண்ணு''
கொங்கு பகுதியில் கூறப்படும் 'சொலவடை' இது; பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், பராமரிப்புடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தம் பொதிந்த பொருளை 'பாங்கா வச்சிக்கோணும்' என்பது குறிக்கிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத திருப்பூரில், சிறுவர், சிறுமியருக்கு கைகொடுப்பவை பூங்காக்கள்தான். மொத்தம், 183 பூங்காக்கள் உள்ளன. இந்தப் பூங்காக்கள் பெரும்பாலானவை, 'பாங்கா வைக்காத' பூங்காக்களாகவே உள்ளன.
மாநகராட்சி வெள்ளி விழாப் பூங்கா, நொய்யல் ஆற்றங்கரையில் செயல்படுகிறது. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் அமைந்துள்ள இப்பூங்காவில், கட்டண அடிப்படையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.மூடப்பட்ட பூங்காக்கள்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ராயபுரம், திருநகர், ஜெ.ஜி., நகர் ஆகியவற்றில், 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, 4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில் உரிய காலத்தில் பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல், சிதிலமடைந்து வீணாகி வருகிறது. மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் உரிய குடியிருப்பு பகுதி நலச்சங்கங்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.
இதுதவிர, திரு.வி.க., நகர், கே.எம்.ஜி., நகர், பி.என்., ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அண்ணா நகர், நஞ்சப்பா நகர், குருவாயூரப்பன் நகர், பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் உள்ளன. இதில் சில பூங்காக்கள் தனியார் அமைப்புகள் மூலம் பராமரிக்கப்படுகிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் திறக்கப்பட்டு பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்டுக்கிடக்கிறது.
காடுகளாக காட்சியளிக்கின்றன
இந்த பூங்காக்களில் உரிய வகையில் பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் தேவையற்ற செடிகள் முளைத்து காடுகளாக காட்சியளிக்கின்றன. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நடை தளம் ஆகியன பெருமளவு சேதமாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. செயற்கை நீரூற்றுகள் மழை பெய்தால் மட்டுமே நீரைப் பார்க்கும் நிலையில் உள்ளன.இவற்றை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். தற்போது பள்ளிகளில் விடுமுறை காலமாக உள்ளதால், சிறுவர்கள் இதைப் பயன்படுத்த ஏதுவாக அமையும். பூட்டப்பட்டுக் கிடக்கும் பூங்காக்களின் முன்புறம், அருகேயுள்ள பகுதிகளில் சிறுவர்கள் விளையாடுகின்றனர்.
மாநகராட்சி பகுதியைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வோர் பெரிய அளவிலான பள்ளி மைதானங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இருப்பினும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை முறையாகத் திறந்து, நல்ல முறையில் பராமரிப்பு செய்யப்படும் நிலையில் அவை அமைக்கப்பட்டதன் நோக்கம் முழுமை பெறும்.
---
---
பராமரிப்பின்றி காணப்படும் குருவாயூரப்பன் நகரில் உள்ள மாநகராட்சி பூங்கா
ராயபுரத்தில் உள்ள பூங்கா, பகலில் திறக்கப்படுவதில்லை. தேர்வுக்காலத்திலாவது திறந்தால், சிறுவர் - சிறுமியருக்குப் பயன் உள்ளதாக இருக்கும்.
-------
போயம்பாளையம், நஞ்சப்பா நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக விளையாடுகின்றனர்.
அங்கேரிபாளையம், அண்ணா காலனியில் உள்ள பூங்கா
வெள்ளியங்காடு, கே.எம்.ஜி., நகரில் உள்ள பூங்கா
பி.என்., ரோடு, 60 அடி ரோட்டில் உள்ள குமரன் நினைவுப்பூங்கா
புது பஸ் ஸ்டாண்ட், பின்புறம் உள்ள பூங்கா.