/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க திட்டம் தேவை! பாழாகும் நீராதாரங்களை பாதுகாப்பது அவசியம்
/
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க திட்டம் தேவை! பாழாகும் நீராதாரங்களை பாதுகாப்பது அவசியம்
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க திட்டம் தேவை! பாழாகும் நீராதாரங்களை பாதுகாப்பது அவசியம்
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க திட்டம் தேவை! பாழாகும் நீராதாரங்களை பாதுகாப்பது அவசியம்
ADDED : மார் 20, 2025 11:22 PM
உடுமலை: ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட பிரதான குளங்களில், அருகிலுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் நேரடியாக கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது. பாசன மற்றும் நிலத்தடி நீராதாரமான குளங்கள் முற்றிலுமாக பாழாகும் முன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில் இருந்து அடுக்குத்தொடராய், ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் அமைந்துள்ளன.
நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கி முற்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளங்கள், தற்போது படிப்படியாக பாழாகி வருகின்றன.
இக்குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், பாசன மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.
தளி பகுதியில் அமைந்துள்ள தினைக்குளத்தில், அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மட்டும் குளத்துக்கு செல்லாமல் இருக்க, முன்பு தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், கழிவு நீர் கலப்பது தொடர்கதையாகவே உள்ளது.
இதே போல், பள்ளபாளையத்தில், செங்குளம் அமைந்துள்ளது. குளத்தின் நீர் தேக்க பரப்பு, 74.84 ஏக்கராகவும், நேரடியாக, 285 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. செங்குளத்தின் அருகில், பள்ளபாளையம் கிராமம் அமைந்துள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இக்கிராமத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், மேற்குப்பகுதியில், ஒருங்கிணைந்து, செங்குளத்திற்கு, தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
விவசாயிகள் வேதனை
கிராமத்தின் திடக்கழிவுகளும், செங்குளத்தின், நீர் தேக்க பரப்பில் வீசப்படுகின்றன. கழிவு நீர் நேரடியாக குளத்தில், கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, சாகுபடியில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள், ஷட்டர் மற்றும் விளைநிலத்திலுள்ள மடைகளில் அடைத்து கொள்வதுடன், மண் வளத்தையும் பாதிக்கிறது.
பெரியகுளம், ஒட்டுக்குளம் கரையிலும் கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் குளத்தின் நீர் வரத்து கால்வாய்களிலும், கழிவு நீர் கலக்கிறது.
ஏழு குளங்களிலும், உள்நாட்டில் இடம் பெயரும் பறவைகளும், வலசை பறவைகளும் சீசனுக்கு வந்து செல்கின்றன. இதனால், குளங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளன. எனவே இக்குளங்களை பாதுகாப்பது அவசியமாகும்.
உள்ளாட்சி நிர்வாகங்களால், கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஏழு குளங்களின், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கருதி, சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு குழு அமைத்து நேரடியாக ஆய்வு செய்த பிறகு, கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.