/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முட்புதருக்குள் ஒரு ரயில்வே ஸ்டேஷன்... கனிவான கவனத்திற்கு!மடத்துக்குளத்தில் பாதுகாப்பாக செல்லுங்க
/
முட்புதருக்குள் ஒரு ரயில்வே ஸ்டேஷன்... கனிவான கவனத்திற்கு!மடத்துக்குளத்தில் பாதுகாப்பாக செல்லுங்க
முட்புதருக்குள் ஒரு ரயில்வே ஸ்டேஷன்... கனிவான கவனத்திற்கு!மடத்துக்குளத்தில் பாதுகாப்பாக செல்லுங்க
முட்புதருக்குள் ஒரு ரயில்வே ஸ்டேஷன்... கனிவான கவனத்திற்கு!மடத்துக்குளத்தில் பாதுகாப்பாக செல்லுங்க
ADDED : ஆக 20, 2024 02:17 AM

உடுமலை;கோவை- திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு இல்லாமல், முட்புதர்கள் சூழ்ந்தும், சமூக விரோத செயல்களின் மையமாகவும் மாறியுள்ளது.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், பொள்ளாச்சி - உடுமலை - மடத்துக்குளம் - பழநி வழித்தடத்தில், திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்துார் எக்ஸ்பிரஸ், கோவை - மதுரை பயணிகள் ரயில், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதில்,பாரம்பரியமான மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், கோவை பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்கிறது.
மடத்துக்குளம் சுற்றுப்புற பகுதியிலுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, ரயில்வே பயணத்திற்கு பிரதான ஸ்டேஷனாக இருந்ததோடு, சர்க்கரை ஆலை, பேப்பர் மில்கள், நுால் மில்கள் என பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும், போக்குவரத்து ஆதாரமாக இந்த ஸ்டேஷன் இருந்தது.
தொடர்ந்து, மடத்துக்குளம் ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்வதில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி எம்.பி., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்துவது மற்றும் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது பராமரிப்பு இல்லாமல் புதர்கள் சூழ்ந்த, பழமையான ரயில்வே ஸ்டேஷன் 'பாழடைந்த' ரயில்வே ஸ்டேஷனாக மாறியுள்ளது.
ரயில்வே பிளாட்பாரங்களின் இரு புறமும், முட்செடிகள் முளைத்தும், ரயில்கள் கடக்கும் போது ஜன்னல் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணியரை, 'பதம்' பார்த்து வருகிறது.
ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பின்றி, முட்செடிகள், கொடிகள் முளைத்தும், குப்பை கொட்டும் மையமாகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும் மாறி, கடும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் மையமாக மாறியுள்ளது.
பொதுமக்கள் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அச்சப்படும் நிலையில், மது அருந்தும் மையமாகவும், கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் மையமாகவும் மாறியுள்ளது.
ஒரே ஒரு ரயில் வரும் நேரம் மட்டும் திறக்கப்படுகிறது. மேலும், நடை மேம்பாலம் முழுவதும், மது பாட்டில்கள், டம்ளர்கள், உணவுக்கழிவுகள், மனித கழிவுகள் என 'நாறி' காணப்படுகிறது.
பராமரிப்பு இல்லாமல், ரயில்வே ஸ்டேஷன் வளாகம், புதர் மண்டி, குப்பை, கழிவுகள் தேங்கி, கட்டுமானங்கள் சிதிலமடைந்து உள்ளது.
பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட, குடிநீர் குழாய்கள் உடைந்தும், கழிப்பறை வளாகம் முழுவதும் முட் புதர்கள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இருக்கை முழுவதும், துர்நாற்றத்துடனும், போதை ஆசாமிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கான பயணியருக்கு பயன் அளித்து வந்த, மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தவும், அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளூர் எம்.பி.,மற்றும் ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்கள், சேவை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.