/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை தவிர்க்க ரவுண்டானா தேவை! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
நெரிசலை தவிர்க்க ரவுண்டானா தேவை! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நெரிசலை தவிர்க்க ரவுண்டானா தேவை! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நெரிசலை தவிர்க்க ரவுண்டானா தேவை! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 17, 2024 09:59 PM

உடுமலை; பெதப்பம்பட்டி நால்ரோட்டில் உயர் மின்கோபுர விளக்கை இடம் மாற்றி, ரவுண்டானா அமைத்தால், போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு உள்ளது. இரு ரோடுகளிலும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள், நால்ரோட்டில் திரும்பி பயணியரை ஏற்றிச்செல்கின்றன.
வாகன போக்குவரத்து அதிகமுள்ளதால், பஸ்களை நிறுத்த இடமில்லாமல் இருந்தது, சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது.
அதன்பின்னர், திட்டமிடல் இல்லாமல், உடுமலை ரோட்டில், குறுகலான இடத்தில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், நால்ரோட்டில் நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.
உடுமலை ரோட்டில் பஸ்களை நிறுத்தும் போது, பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை; உயர் மின் கோபுர விளக்கையொட்டி கனரக வாகனங்கள் திரும்ப முடிவதில்லை.
வாகனங்கள் நால்ரோடு வரை அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. அப்பகுதியில் மக்கள் காத்திருக்க இடமும் இல்லை.நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, உயர் மின் கோபுர விளக்கை இடம் மாற்றி, நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, குடிமங்கலம் போலீஸ் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினருடன் ஆலோசித்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.