/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை தரம் பிரிப்பு மையத்தில் தொடர் தீவிபத்து
/
குப்பை தரம் பிரிப்பு மையத்தில் தொடர் தீவிபத்து
ADDED : மார் 16, 2026 07:31 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி குப்பை தரம் பிரிப்பு மையத்தில் மர்மமான முறையில் இரு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
திருப்பூரில் நிலவிவந்த குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மையில் சற்று மாறுதல் காணப்படுகிறது. குப்பைகள் தரம் பிரித்து அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்னம்பாளையம் சந்தை வளாகம் பின்புறம் உள்ள மையத்தில் உலர் குப்பைகள் தரம்பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் மின் உற்பத்தி மையத்துக்கும், மக்காத குப்பைகள் பேல் செய்யப்பட்டு, சிமென்ட் ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தரம் பிரித்த கழிவுகள் அங்கு ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்பட்டிருந்த குப்பையில் கடந்த டிச., 20ம் தேதி இரவு நேரம் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த கழிவுகள் எரிந்ததோடு, ெஷட்டும் நாசமானது.
அந்த வளாகம் இரு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதற்குப் பதிலாக அருகேயுள்ள மற்றொரு கிடங்கில் குப்பை கழிவுகள் சேமிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் இந்த கிடங்கிலும் திடீரென தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசமாகின.
முதல் முறை நடந்த தீ விபத்தின் போது அங்குள்ள கண்காணிப்பு கேமரா இணைப்புகள் முற்றிலும் சேதமாகியுள்ளது. அது சரி செய்யப்படவில்லை. இதனால், இரண்டாவது முறை விபத்து நடந்த போது எந்தப்பதிவுகளும் கிடைக்கவில்லை. இதனால் இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த விவரமும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

