/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலத்தை பதம் பார்த்த பலத்த காற்று
/
மங்கலத்தை பதம் பார்த்த பலத்த காற்று
ADDED : ஏப் 07, 2025 10:57 PM

திருப்பூர்; நேற்று முன்தினம், சூறாவளியுடன் பெய்த மழையால், திருப்பூர் அடுத்த மங்கலம் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான மரங்கள், வேருடன் சாய்ந்தன; மின் கம்பங்களும் முறிந்துவிழுந்தன.
மங்கலத்தில் உள்ள தர்கா அருகே, பெரிய மரம் சாய்ந்தது; அடுத்தடுத்து நான்கு மரங்கள் வேருடன் சாய்ந்தன. கனரா வங்கி அடுத்துள்ள பகுதியிலும், வேப்பமரம் வேருடன் சாய்ந்துள்ளது. நேற்று அதிகாலை முதல், மரங்கள் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. சிறிய மரங்கள் வேருடன் சாய்ந்தும், முறிந்து விழுந்தும் சேதமாகின.
மரங்கள் காற்றில் துாக்கி வீசப்பட்டதால், மின்கம்பிகள் மீது விழுந்து, மின்கம்பங்கள் முறிந்துவிழுந்தன. மங்கலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரண்டு மரங்கள் வேருடன் சாய்ந்தன.
மங்கலம், பூமலுார், வஞ்சிபாளையம் பகுதிகளில், மின்கம்பங்கள் சேதமாகியதால், மின் வினியோகம் தடைபட்டது. மின்வாரிய அலுவலர்கள் மேற்பார்வையில், 20க்கும் மேற்பட்ட பணியாளர் குழு, சேதமான மின்கம்பங்களை மாற்றும் பணியில், போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர்.
ஆலமரம் சாய்ந்தது
சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே இருந்த, 60 வயது ஆலமரமும், வேருடன் சாய்ந்தது; இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சின்னாண்டிபாளையம் செல்லும் ரோட்டில், மின்கம்பம் சாய்ந்துள்ளதால், மக்கள் கயிறு கட்டி விழாமல் தடுத்து வைத்துள்ளனர். ஆண்டிபாளையம் படகுத்துறையில், அறிவிப்பு பலகைகளும், சிறிய மரங்களும் சாய்ந்தன.
பலத்த காற்று வீசியதால், சின்னாண்டிபாளையம் பகுதியில் இருந்த இரண்டு சிமென்ட் ஷீட் வேய்ந்த வீடுகள் முழுவதும் சேதமாகின. குறிப்பாக, 75 வயதுள்ள மூதாட்டி வசிககும் வீட்டின் ஓடுகள், காற்றில் பறந்து சென்றுவிட்டன. கார் ெஷட் காற்றில் விழுந்ததால், உள்ளே நிறுத்தி வைத்திருந்த கார் சேதமானது.
நேற்று முன்தினம் மாலை, பலத்த காற்று வீசும் போது, டூ வீலரில் இரண்டு குழந்தைகளுடன் சென்றவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மக்கள் அவர்களை மீட்டனர். காரில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது, மரம் முறிந்து விழுந்தும் விபத்து ஏற்பட்டது; தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாபாளையம், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டி, சோளி பாளையம், காவிலிபாளையம் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மரங்கள் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்ததால், 28 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. திருஆவினன்குடி நகர், ஜீவா நகரில் ஆறு வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. மின் கம்பம் முறிந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருப்பூர், 37-வது வார்டு அணைப்பாளையம், புளியங்காடு பகுதியில் மின் கம்பம் முறிந்துவிழுந்தது.
சூறாவளியால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளைக் களைய, மீட்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்திஉள்ளனர்.