/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒடிசாவில் திருப்பூர்! பனியன் நிறுவனங்களை அமைக்க முடிவு; தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்க முயற்சி
/
ஒடிசாவில் திருப்பூர்! பனியன் நிறுவனங்களை அமைக்க முடிவு; தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்க முயற்சி
ஒடிசாவில் திருப்பூர்! பனியன் நிறுவனங்களை அமைக்க முடிவு; தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்க முயற்சி
ஒடிசாவில் திருப்பூர்! பனியன் நிறுவனங்களை அமைக்க முடிவு; தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்க முயற்சி
UPDATED : ஜூலை 29, 2025 08:26 AM
ADDED : ஜூலை 28, 2025 11:01 PM

திருப்பூர்: தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, ஒடிசா மாநில அரசின் அழைப்பை ஏற்று, அம்மாநிலத்தில் புதிய கிளையை துவக்க, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
கடந்த வாரம் திருப்பூர் வந்திருந்த, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது சொந்த மாநிலமாகிய ஒடிசாவில் தொழில் துவங்க வருமாறு அழைப்புவிடுத்தார். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், வடமாநில அரசுகளின் சலுகை அறிவிப்பை ஏற்று, தங்களது கிளையை துவக்க, ஏற்கனவே உத்தேச முடிவில் இருந்தன.
ஒடிசா மாநில அரசும், பல்வேறு சலுகைகளுடன், தொழில்துவங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அழைப்பை ஏற்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை சேர்ந்த, 12 நிறுவனங்களின் பிரதிநிதிகள், குழுவாக ஒடிசா சென்றனர்.
புவனேஸ்வரில் நடந்த 'ஒடிசா டெக்ஸ்ட் 2025' என்ற மாநாட்டிலும் பங்கேற்றனர். வடமாநிலங்களில் தொழில் துவங்க, திருப்பூரின் முன்னணி நிறுவனங்கள், நிலம் வாங்கி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது; விரைவில், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பாவுடனான ஒப்பந்தமும் நிறைவேறப்போகிறது. அதன்மூலமாக, அதிகபட்ச ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வரும்.
வழக்கமான ஆர்டர்களுடன், கூடுதலாக வரும் ஆர்டர்களையும் கவர்ந்து, உற்பத்தியை திறம்பட செய்ய வேண்டிய சவால், திருப்பூர் ஏற்றுமதியாளர் முன் காத்திருக்கிறது. இல்லாதபட்சத்தில், இந்தியாவை நோக்கி வரும் புதிய ஆர்டர்வாய்ப்பு, பல்வேறு மாநிலங்களை நோக்கி சென்றுவிடவும் வாய்ப்புள்ளது.
திருப்பூரின் தனித்திறமைக்கான வாய்ப்புகளை தக்கவைக்க, தொழில் விரிவாக்கம் செய்ய, ஏற்றுமதியாளர்கள் தயாராகிவிட்டனர். தற்போதைய நிலவரப்படி,திருப்பூருக்கு மட்டும் ஒரு லட்சம் தொழிலாளர், கூடுதலாக தேவைப்படுகின்றனர்.
வரும் காலத்தில், தொழிலாளர் தேவை இரண்டு மடங்காக உயரவும் வாய்ப்புள்ளது. தொழிலாளர்களை, சிறப்பான பயிற்சி அளித்து தயார்படுத்தவும், ஒடிசாவில் கிளை திறக்க ஏற்றுமதியாளர்கள் தயாராகிவிட்டனர். அதன்மூலமாக மட்டுமே, எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமென திட்டவட்டமாக கூறுகின்றனர்.
திருப்பூரின் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள், ஒடிசா வந்திருந்தன. பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களில், ஒடிசாவின் பங்களிப்பு மிக அதிகம். கடுமையாக உழைப்பார்கள்; பெண் தொழிலாளர் எளிதாக தையல் பழகிவிடுகின்றனர். ஏஜன்சிகளில், பயிற்சி அளித்து அழைத்து வருகிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, திருப்பூரின் கிளைமேட் ஒத்துப்போவதில்லை.
பயிற்சி நிலையங்களை காட்டிலும், யூனிட்களில் நேரடியாக, சிறப்பான பயிற்சி பெறலாம். சம்பளம் அதிகம் பெற, திருப்பூர் வந்து பணியாற்றவும் வருவார்கள். பெற்றோரின் அழுத்தத்தால் திருப்பூருக்கு வருவது மாறி, முழு அளவில் தயாராகி, விருப்பமாக திருப்பூர் வருவர். திருப்பூரில் அனுபவம் பெறும் தொழிலாளர், திருமணமாகி ஒடிசா சென்று விடுகின்றனர்; மீண்டும் குழந்தைகளுடன் திருப்பூர் வரமுடிவதில்லை. அதுபோன்ற தொழிலாளருக்கு, ஒடிசாவிலேயே வேலை வாய்ப்பு பெறும் வகையில், சிறிய யூனிட் துவக்க உத்தேசித்துள்ளோம்.
மதிப்பு கூட்டப்பட்ட உயர்தர ஆடைகள், விளையாட்டு ஆடைகள், செயற்கை நுாலிழை ஆடைகள், உடற்பயிற்சி ஆடைகளை திருப்பூரில் வழக்கம் போல் உற்பத்தி செய்யலாம். அடிப்படையிலான பின்னலாடைகளை, ஒடிசாவில் உற்பத்தி செய்து, அங்கிருந்தே ஏற்றுமதி செய்யலாம். 'நிட்டிங்'. சாய ஆலைகள் துவக்கவும் சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. முதல் கட்டமாக, திருப்பூரிலிருந்து 'பேப்ரிக்' கொண்டு சென்று உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்.
- சுனில்குமார்,
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி துணை குழுவின் துணை தலைவர்.

