ADDED : ஜூன் 09, 2025 12:18 AM

திருப்பூர்; திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முகங்களில் வண்ணங்களை பூசி, மரங்களை போல் உடையணிந்த மாணவர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
'டாலர்களில் வர்த்தகம் என உலகளாவிய புகழ்பாடும் திருப்பூரில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் வியாபித்து இருக்கிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பையை பிரித்து அகற்றுவது; பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஆகியவை தன்னெழுச்சியாக உருவானால் தான் சுகாதாரத்தை உறுதிப்படுத்த முடியும்' என்ற கருத்தை முன்வைத்தனர்.
கண்ட இடங்களில் குப்பைகளை வீசியெறிவது; அதனால், ஏற்படும் தீமைகள்; நீர்நிலைகளை துார் வாராமல் இருப்பது; நீர்வழித்தடங்கள் சேதமாவது; புயல், மழை வெள்ளம் போன்ற காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுவது போன்ற, இன்னல்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தனர்.
நம்மை சுற்றியுள்ள பகுதியை, மாசில்லாமல் மாற்றினாலே, நம் பகுதி ஒரு சுற்றுலா தலமாக மாறும். நீர், நிலம், காற்றை மாசுபடுத்துவது பிளாஸ்டிக் தான். முன்பெல்லாம் மண்ணை தோண்டினால் தங்கம், வைரம் என புதையல் கிடைக்கும்; ஆனால், இன்று, எங்கு தோண்டினாலும் பாலிதீன் ஆதிக்கம் தான். இன்று, மண்ணை மலடாக்கியிருக்கிறது பாலிதீன்.
மண்ணுக்கு, மரமே மகிழ்ச்சி தரும், என்பது போன்ற பல கருத்துகளை, 'மைம் ேஷா' மற்றும் பொம்மலாட்டம் வாயிலாக உணர்த்தினர்.
'இதே நிலை நீடித்தால் மரங்களில் இலை இருக்காது; பசுமைக்கு பஞ்சம் ஏற்படும்; வெப்பம் அதிகரிக்கும்; இதனால், நோய் பரவும்; ஆயுள் குறையும்' என்ற எச்சரிக்கையுடன், பாலிதீன் தவிர்ப்பு உறுதிமொழியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்ற கருத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.