/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் காப்பதில் உறுதி காட்டிய கிராமம்
/
சுற்றுச்சூழல் காப்பதில் உறுதி காட்டிய கிராமம்
ADDED : ஜூலை 30, 2025 10:16 PM
ப ல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை கொட்ட முயன்றதால், ஒட்டுமொத்த கிராமமும் கொதித்து எழுந்தது.
'எங்களை மீறி குப்பைகளை கொட்டுவதானால், விஷத்தை கொடுத்துக் கொன்றுவிடுங்கள்' என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உறுதித் தன்மையுடன் இருந்தனர்.  போலீஸ் படை மூலம், பொதுமக்களை பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில், குப்பை கொட்ட வந்த வாகனங்கள் அனைத்தும் வந்த வழியே திரும்பிச் சென்றன.
போராட்டக் களத்துக்கு வந்த தாசில்தார் சபரி,  'இனி குப்பைகள் கொட்டப்படாது' என உறுதியளித்ததுடன், ரோட்டிலேயே நின்று எழுதியும் கொடுத்தார். இவ்வாறு, நிலத்தையும் நீரையும் காப்பாற்ற பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டம், திருப்பூர் மாவட்டம் முழுக்க திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எதிர்காலத்தில் குப்பைகளை அழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்க வேண்டியது, மாநகராட்சி, நகராட்சிகள் மட்டுமன்றி, சிறிய ஊராட்சிகளுக்கும் பொருந்தும் என்பதை இப்போராட்டம் தெரியப்படுத்தி உள்ளது.

