/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாமரைக்குளத்தில் நடைபாதை அமைகிறது
/
தாமரைக்குளத்தில் நடைபாதை அமைகிறது
ADDED : ஏப் 25, 2025 11:43 PM

தாமரைக்குளத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை அமைக்கும் பணிகள் துவங்கின.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் வரலாற்று தொடர்புடையதாக போற்றப்படும், மங்கலம் ரோட்டிலுள்ள தாமரைக்குளத்தில், குளம் காக்கும் இயக்கத்தினர், வாரந்தோறும், சுத்தம் செய்து வருகின்றனர். அவ்வகையில், 36 வாரங்களை கடந்து, பொதுமக்களுடன் இணைந்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.
அதில் ஒரு நடவடிக்கையாக, குளக்கரையில், பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய, நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், நீர்வள ஆதாரத்துறையிடம் அனுமதி பெற்று, களை செடிகள், முள் மரங்கள், ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணியினை துவங்கினர்.
குளம் காக்கும் இயக்க நிர்வாகி பழனிசாமி கூறுகையில், ''தாமரைக்குளக்கரையில், வாரந்தோறும் துாய்மை பணி மேற்கொண்டு வருகிறோம். அதில், ஒரு கட்டமாக நடைபாதை அமைக்க முயற்சி எடுத்துள்ளோம். முதல் கட்டமாக, குளக்கரையில் வளர்ந்துள்ள முள் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்பின், நீர்வளத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி, கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் முயற்சி எடுத்து வருகிறோம்,'' என்றார்.
குளம் காக்கும் இயக்கத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

