/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழுத்தில் கத்தியை வைத்து பெண்ணிடம் நகை பறிப்பு
/
கழுத்தில் கத்தியை வைத்து பெண்ணிடம் நகை பறிப்பு
ADDED : பிப் 14, 2024 01:54 AM
பல்லடம்:சுல்தான்பேட்டை அருகே பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டையை அடுத்த செஞ்சேரிமலையை சேர்ந்த தேவானந்தம் மனைவி நித்தியானந்தி, 52. இவர் மகள்கள் அட்சயதீபா 29, சூர்யாஸ்ரீ 23. அட்சய தீபாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. சூர்யாஸ்ரீ லண்டனில் படித்து வருகிறார்.
தேவானந்தம் காலமானதை தொடர்ந்து, நித்தியானந்தி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நித்யானந்தி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, பின்பக்க கதவை உடைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ஆசாமிகள் மூன்று பேர், நித்தியானந்தியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் கொடுத்தனர்.
அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் உட்பட, பீரோவில் வைத்திருந்த நகைகள் என, மொத்தம், 22 சவரன் நகை, ஒரு செட் வைர வளையல் மற்றும், 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

