UPDATED : நவ 22, 2026 02:52 PM
ADDED : நவ 22, 2026 02:52 PM

உடுமலை: உடுமலையில், பிரதான ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில், குறியீடுகள் இல்லாததால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலையிலுள்ள பிரதான ரோடுகளான, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு மற்றும் நகராட்சி பராமரிப்பிலுள்ள அனுஷம் ரோடு, காந்தி நகர் உள்ளிட்ட ரோடுகள், ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளில், வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது.
ஆனால், வேகத்தடை உள்ளது குறித்து முன்னதாகவே வைக்கப்படும் அறிவிப்பு பலகை மற்றும் வேகத்தடை உள்ளதை வாகன ஓட்டுனர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெள்ளை கோடு அமைத்தல் உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு குறியீடுகளும் அமைக்கப்படாமல் உள்ளது.
வாகன வேகத்தை கட்டுப்படுத்தி, விபத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடைகளே, விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக மாறி வருகின்றன.
அதே போல், நகர பகுதியில் பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழி பகுதியில், பல இடங்களில் உயரமாக அல்லது பள்ளமாக ஆள் இறங்கும் குழிகள் உள்ளதோடு, இக்குழி குறித்தும் எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கவில்லை. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
எனவே, ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு உரிய குறியீடுகள் அமைக்கவும், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
