/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில்லா தீபாவளி; பள்ளிகளில் விழிப்புணர்வு
/
விபத்தில்லா தீபாவளி; பள்ளிகளில் விழிப்புணர்வு
ADDED : அக் 17, 2025 11:19 PM

- நிருபர் குழு -
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடுமலை, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்தும், பெற்றோர் உதவியின்றி பட்டாசுகளை கையாள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
தீத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது; அசம்பாவிதம் ஏற்பட்டால், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, உதவி ஆசிரியர் கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான, மாசில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். பசுமை தீபாவளி கொண்டாட வேண்டியதன் நோக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சமூக வலைதளங்களின் பாதிப்புகள் தெரியும் வகையில், குழந்தைகள் கைவினை பொருட்களை வடிவமைத்து, விளக்கம் கொடுத்தனர். டிஜிட்டல் பயன்பாட்டில் நேர மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
* ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலையர்களின் கலை நிகழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இனிப்பு மேளா நடந்தது. உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர்கள், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து வழிகாட்டுதல் வழங்கினர். அரசு பரிந்துரையின்படி, விபத்தில்லா தீபாவளி கொண்டாட, மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி * பொள்ளாச்சி அருகே, கோபாலபுரம் எம்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில், தீபாவளி குறித்த நாடகம், நடனம், மவுன மொழி நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
* கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, பரிசு பொருட்கள் வழங்குதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோபனா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் மன்ற பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தலைவர் முருகேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணை தலைவர் சிவக்குமார், புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். அனைத்து மாணவர்களுக்கும் புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியர் சத்தியா நன்றி கூறினார்.
* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். இனிப்புகள் பரிமாறி தீபாவளி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
பள்ளி தலைவர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், தீபாவளி வாழ்த்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.மேலும், பட்டாசுகள் வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்து பள்ளி முதல்வர் மாணவர்களிடம் விளக்கினார்.