ADDED : ஜூன் 14, 2026 09:14 AM
திருப்பூர்: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீண்ட துாரம் (3,797 கி.மீ.) பயணிக்கும் ரயில்களில் ஒன்றாக, ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16317) உள்ளது.
வெள்ளிதோறும் கன்னியாகுமரியில் புறப்படும் ரயில் திங்கட்கிழமை, ஜம்மு-காஷ்மீர், மாதா வைஷ்ணவி தேவி கோவில், காட்ரா ஸ்டேஷன் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக, திங்கள் இரவு அங்கிருந்து புறப்படும் ரயில் (எண்:16318) வியாழன் கன்னியாகுமரி வந்தடைகிறது.
ரயிலில் கூட்ட நெரிசல், டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகையில், கடந்த 12 முதல் வரும் 26ம் தேதி வரையும், காட்ராவில் இருந்து புறப்படுகையில், 15 முதல் 29ம் தேதி வரையும், கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயிலில், ஏழு ஏ.சி., பெட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
