'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் பிரத்யேக தர மதிப்பீட்டு சான்றிதழ் வழிகாட்டி நெறிமுறையை உருவாக்கிய சி.ஐ.ஐ.,
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் பிரத்யேக தர மதிப்பீட்டு சான்றிதழ் வழிகாட்டி நெறிமுறையை உருவாக்கிய சி.ஐ.ஐ.,
ADDED : ஜூன் 14, 2026 09:14 AM
திருப்பூர்: 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்கும் நிறுவனங்களுக்கு, பசுமை தரச்சான்று வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறையை, இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் திருப்பூரில் மட்டுமே, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையில் சாயக்கழிவு நீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நடைமுறைக்காக, தொழிற்சாலைகள் அதிக செலவு செய்தாலும், இதுவரை அதற்கென தனிப்பட்ட அங்கீகாரம் அல்லது தரச்சான்று வழங்கப்படவில்லை.
எதிர்காலத்தில் ஜவுளித் துறையின் வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வளம் குன்றா உற்பத்தி முறைகளை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்பதால், தண்ணீர் பயன்பாடு, கார்பன் உமிழ்வு மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்து தரநிர்ணயம் செய்யும் முயற்சியில், சி.ஐ.ஐ., ஈடுபட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் உள்ள வல்லுநர்களின் பங்களிப்புடன், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றும் நிறுவனங்களுக்கு, பசுமை தரச்சான்று வழங்குவதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்டத் தலைவர் சுனில்குமார் ஜூன்ஜூன்வாலா கூறியதாவது:
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளுக்கு, உலகளவில் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி, 'நெட் ஜீரோ' இலக்கை அடைய உதவும் வகையில், கார்பன் உமிழ்வு கட்டுப்பாடு, கழிவு மறுசுழற்சி உட்பட அம்சங்களை அடிப்படையாக கொண்டு, இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மற்றும் பல்வேறு தொழில் துறை பிரதிநிதிகளின் ஆலோசனை அடிப்படையில் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றும் நிறுவனங்கள், தரநிர்ணய அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை பெறும் வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
