/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமான நிலக்கடலை விதை கிடைக்க கூடுதல் கவனம்
/
தரமான நிலக்கடலை விதை கிடைக்க கூடுதல் கவனம்
ADDED : செப் 29, 2024 02:06 AM
அவிநாசி: அவிநாசி மற்றும்கிராமப் பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
நிலக்கடலை காரிப் மற்றும் ராபி பருவங்களில் பயிரிடப்படுவதால் வருடம் முழுவதும் நிலக்கடலை கிடைக்கக்கூடிய பயிராக விளங்குகிறது.
அதில் அவிநாசி வட்டாரம் கானுார்புதுார் கிராமத்தில் விவசாயி முத்துச்சாமி என்பவரின் தோட்டத்தில் டிஎம்வி 14, ரக நிலக்கடலை,ஆதார நிலை 1, விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, டிஎம்வி ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரக்கூடியதாகவும் 48 சதவீதம் எண்ணெய் சத்தும் 70 சதவீதம் உரிப்பு திறனும் கொண்டதாக விளங்குவதால் அதிக லாபம் தரக்கூடிய ரகமாக விளங்குகிறது.
விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது:
இந்த ரகமானது இலைப்புள்ளி மற்றும் துரு நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையது.
மானாவாரியில் சராசரியாக ஹெக்டருக்கு 2222 கிலோவும், பாசன முறையில் 2360 கிலோவும் மகசூல் தரக்கூடியது.
அனைத்து விதைச் சான்றளிப்பு நடைமுறைகளையும் பின்பற்றி நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க கூடுதல் கவனத்துடன் ஆய்வுப் பணிகளை விதைச் சான்று அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விதைச் சான்றளிப்பு அலுவலர் கவிதா, உதவி விதை அலுவலர் வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.