/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெற் பயிர்களை காப்பாற்ற கூடுதல் நீர் வழங்கணும்
/
நெற் பயிர்களை காப்பாற்ற கூடுதல் நீர் வழங்கணும்
ADDED : பிப் 15, 2025 06:49 AM
உடுமலை; நெற் பயிர்களை காப்பாற்றும் வகையில், அமராவதி பிரதான கால்வாயில், மார்ச் மாதத்தில் இரண்டு சுற்று நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளது.
மடத்துக்குளம் தாலுகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், செயலாளர் வீரப்பன், தலைவர் ராஜரத்தினம், பொருளாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் அமராவதி செயற்பொறியாளரிடம் வழங்கிய மனு:
அமராவதி பிரதான கால்வாய் பாசன பகுதிகளில், கடந்த இரு மாதங்களுக்கு முன், பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, ஏறத்தாழ, 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற் பயிர்கள் கருகின.
வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தனர்.
மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் உயர் அதிகாரிகள், நெல் சாகுபடியை மீண்டும் துவக்கும் வகையில், மறு நடவும், புதிதாக நெல் விதைப்பும் மேற்கொள்ள அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், விவசாயிகள் மீண்டும் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், அமராவதி அணையிலிருந்து, பிரதான கால்வாயில், பிப்.,மாத இறுதி வரை மட்டுமே நீர் திறந்து, பாசனம் நிறைவு செய்தால், இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் நீர் இல்லாமல் காயும் நிலை உள்ளது.
எனவே, மார்ச் மாதத்தில், 2 வது வாரம் மற்றும் இறுதி வாரம் என, இரு முறை, 5 நாட்கள் நீர் வழங்கி, ஏற்கெனவே, நெற் பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

