/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்களின் கணவர்கள் வாக்குவாதம்; தி.மு.க., மேயர் சமாதானம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்களின் கணவர்கள் வாக்குவாதம்; தி.மு.க., மேயர் சமாதானம்
அ.தி.மு.க., கவுன்சிலர்களின் கணவர்கள் வாக்குவாதம்; தி.மு.க., மேயர் சமாதானம்
அ.தி.மு.க., கவுன்சிலர்களின் கணவர்கள் வாக்குவாதம்; தி.மு.க., மேயர் சமாதானம்
ADDED : பிப் 14, 2024 11:54 PM
திருப்பூர் : வார்டு பகுதியில் 9.5 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் கட்டும் பணிக்கு ஆய்வு நடந்தது. அப்போது வடிகால் அமைக்கும் பாதை தொடர்பாக இரு கவுன்சிலர்களின் கணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து மாற்று ஏற்பாடு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 16வது வார்டு பகுதிகளில் 9.5 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கட்டப்படவுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நடந்து முடிந்த நிலையில், பொறியியல் பிரிவினர் திட்ட வடிவமைப்பை அளித்தனர்.
இதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என 16வது வார்டு கவுன்சிலரும்; திட்டம் சரியாக உள்ளது என 15வது வார்டு கவுன்சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இரு பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் இடையே கருத்து முரண் ஏற்பட்டது.
அண்மையில், 16வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி தலைமையில் வார்டு பொதுமக்கள் மேயர், கமிஷனர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். மண்டல கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் திட்டம் குறித்து மேயர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர் தமிழ்ச்செல்வியின் கணவர் கனகராஜ், சாந்தியின் கணவர் பாலசுப்ரமணியம் இருவரிடையே வாக்குவாதம் எழுந்து இருவரும் ஒருமையில் கடுமையாகப் பேசிக் கொண்டனர்.
அவர்களை சமாதானம் செய்த மேயர் தினேஷ்குமார், திட்டத்துக்கான மாற்று வழி குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில், தற்போதுள்ள கால்வாய்களை இணைக்காமல் மாற்று வழியில் மழை நீர் வடிகால் நேரடியாக வார்டு பகுதியைக் கடந்து நல்லாற்றில் கொண்டு சேர்க்கும் விதமாக திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இரு தரப்பையும் நேரில் வரவழைத்து மேயர் மற்றும் பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
அதன்படி திட்டத்தில் சிறு மாறுதல் செய்து அதற்கான ஒப்புதல் பெற்று பணிகளைத் துவங்க முடிவு செய்யப்பட்டது.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தி.மு.க.,வை சேர்ந்த மேயர் சமாதானம் செய்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

