ADDED : மார் 08, 2024 12:34 PM
வால்ரஸ் நிறுவன உரிமையாளர் அனிதா டேவிட் கூறியதாவது:
இக்காலகட்டத்தில் மகளிருக்கு, பல இடங்களில் சுய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், முழுமையான உரிமையை பெறுவதில் பெண்களுக்கு இன்றும் ஏராளம் சோதனைகள் உள்ளன.
வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, கூடுதல் நேரமிருந்தால் மட்டும், பெண்கள் வெளியே சென்று சாதிக்கலாம் என்கிற நிலைதான் உள்ளது. அதையும்மீறி வெளியேவந்தாலும், பெண்கள் சாதிப்பதில் ஏராளமான சவால்கள் இருக்கின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பச்சூழலில் உள்ள பெண்கள்தான், எளிதாக வெளியேவந்து, சமுதாயத்தில் சாதிக்க முடிகிறது. ஆண்கள், மது குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, சரிவர வேலைக்குச்செல்லாதநிலையில், பெண்கள் சுதந்திரமாக செயல்பட்டு, தொழிலாளராக, தொழில்முனைவோராக மாறி, குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றனர்.
பொருளாதாரம் மிக்க குடும்பத்தைச்சேர்ந்த பெண்களை பொருத்தவரை, ஏற்கனவே போதுமான வசதி வாய்ப்புகள் இருக்கும்போது, ஏன் வேலைக்குச் செல்லவேண்டும்; குடும்ப பொறுப்புகளை மட்டும் கவனித்தால் போதும் என்கிற கருத்தே வலுப்பெறுகிறது.
என்னதான் பெண் தொழில்முனைவோராகவே இருந்தாலும்கூட, அவர்களுக்கு முழுமையான நிதி சுதந்திரம் கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான். பல இடங்களில் ஆண்களுக்கு நிகரான சுதந்திரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை.
அந்தவகையில், வால்ரஸ் நிறுவன உரிமையாளராக என்னால், முழுமையான சுதந்திரம் மிக்க தொழில்முனைவோராக செயல்பட முடிகிறது.
ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அதிகபட்ச கல்வி அளிக்கப்பட வேண்டும். சரியான முடிவெடுக்கும் திறனோடு, சோதனைகளை கடந்து, சாதனை படிக்கட்டுக்களில் பயணிக்கத் துவங்கி விடுவர்.

