/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திரும்பும் திசையெங்கும் விளம்பர பதாகை
/
திரும்பும் திசையெங்கும் விளம்பர பதாகை
ADDED : ஜூலை 04, 2025 11:05 PM

திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் பொது இடங்களில், அரசியல் கட்சிகள், வர்த்தகம், கல்வி நிலையங்கள் என பல்வேறு வகைகளில் விளம்பர பதாகைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது பலத்த காற்று வீசும் நிலையில், அவற்றால் விபரீதம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
திருப்பூர் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில், விளம்பர பதாகைகள் வைக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. அதை மீறி விளம்பர பதாகை வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு.இருப்பினும், எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி திரும்பும் திசையெங்கும் விளம்பர பதாகை மற்றும் பெரியளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
சில இடங்களில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல், ரோட்டை ஒட்டி வைக்கப்பட்டுள்ளதால் பலத்த காற்று வீசும் சமயத்தில் அவை கீழே விழும் நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழலும் உள்ளது.
பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் போட்டி போட்டு, விளம்பர பலகைகள் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, அனுமதியின்றி ஆபத்தான முறையில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை கண்டறிந்து, அப்புறப்படுத்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். திருப்பூர் மற்றும் ஊரகப்பகுதிகளில் சில நாட்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசி வரும் நிலையில், விளம்பர பதாகைகளால் விபரீதம் ஏற்படுவது, முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டும்.