/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மையத்தடுப்புகளில் விளம்பர தட்டி
/
மையத்தடுப்புகளில் விளம்பர தட்டி
ADDED : நவ 09, 2025 12:00 AM

திருப்பூர்: அவிநாசி ரோட்டில் மையத்தடுப்பில் உள்ள விளக்கு கம்பங்களில் விளம்பர தட்டிகள் அமைக்கும் செயல் மீண்டும் தலைதுாக்கியுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ேஹார்டிங்குகள், விளம்பர பேனர்கள், போர்டுகள், தட்டிகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நகரப் பகுதியிலும் ரோட்டோரம் உள்ள கட்டடங்களில் உயரமான பகுதிகளில் விளம்பர ேஹார்டிங்குகள் போன்றவை அமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் இது போன்ற ேஹார்டிங், பேனர், கட் அவுட்களால் ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து இதில் கடுமையான உத்தரவை கோர்ட் பிறப்பித்து, உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகங்களும் இதில் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு விதிமீறல்கள் தடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போது களமிறங்கும் அரசு துறைகள் பின்னர் வழக்கம் போல் அதைக் கண்டு கொள்ளாமல் விடுவது சகஜமாக உள்ளது. அவ்வகையில் தற்போது திருப்பூர் பகுதியில் மெல்ல இந்த ரோட்டோர, அனுமதியற்ற, விதிமீறல் விளம்பரங்கள் மீண்டும் தலைதுாக்கத் துவங்கியுள்ளன.
கடந்த சில மாதம் முன்னர் திருப்பூர் நகரப் பகுதியில், ரோட்டில் ஓரங்களில் இருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன; அதே போல் நெடுஞ்சாலை மையத்தடுப்புகளிலும், மின் விளக்கு கம்பங்களிலும் இருந்த விளம்பர தட்டிகளும் அகற்றப்பட்டன.இந்நிலையில் தற்போது மீண்டும் அவிநாசி ரோட்டில் இந்த விதிமீறல் துவங்கியுள்ளது. திருமுருகன் பூண்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதியில், நெடுஞ்சாலை மையத்தடுப்பில் உள்ள மின் விளக்கு கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் கட்டுப்பட்டுள்ளன.
இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதற வைப்பதோடு, கழன்று விழுந்தால், ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, அவற்றை அகற்ற வேண்டும்.

