ADDED : டிச 12, 2024 06:34 AM

திருப்பூர்; கார்த்திகை தீபத்திருநாளை யொட்டி, திருப்பூரில் அகல் விளக்கு விற்பனை ஜோராக நடக்கிறது.
திருக்கார்த்திகை தீபத் திருநாளான நாளை, திருவண்ணாமலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றும், திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. திருப்பூரில், கோவில்கள், வீடுகள், தொழில் நிறுவனங்களில், தொடர்ந்து மூன்று நாட்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றுவது வழக்கம்.
திருப்பூர் - தாராபுரம் ரோடு தெற்கு போலீஸ்ஸ்டேஷன் அருகில், பி.என்.,ரோடு மும்மூர்த்தி நகர், காங்கயம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில், ரோட்டார மண்பாண்ட கடைகளில், வெவ்வேறு வகையான மண் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்காக பொதுமக்கள் ஆர்வமுடன் விளக்குகளை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
மொத்த வர்த்தகத்தில், ஆயிரம் அகல் விளக்குகள் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை வர்த்தகத்தில், சாதாரண அகல் விளக்குகள் 1 ரூபாய் 50 ரூபாய், 2 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
குத்து விளக்கு போன்று ஐந்து முகம் கொண்ட பெயின்டிங் செய்யப்பட்ட விளக்குகளும் உள்ளன. அதிகபட்சம் 100 ரூபாய் வரையிலான விளக்குகள் உள்ளன.