/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்ட பராமரிப்புக்கு கூடுதல் பணியாளர் விவசாய அமைப்புகள் யோசனை
/
அத்திக்கடவு திட்ட பராமரிப்புக்கு கூடுதல் பணியாளர் விவசாய அமைப்புகள் யோசனை
அத்திக்கடவு திட்ட பராமரிப்புக்கு கூடுதல் பணியாளர் விவசாய அமைப்புகள் யோசனை
அத்திக்கடவு திட்ட பராமரிப்புக்கு கூடுதல் பணியாளர் விவசாய அமைப்புகள் யோசனை
ADDED : ஜூலை 27, 2025 07:17 AM
திருப்பூர் : 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட பராமரிப்பு பணிக்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,045 குளம், குட்டைகளை நிரப்பும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில், பலத்த மழை பெய்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர், பவானிசாகர் அணையை நிரப்பி, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக வெளியேறும். இந்த நீர் தான், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
பருவமழை காலங்களில் மட்டுமே இதுபோன்று, வெள்ளம் பெருக்கெடுக்கும்; உபரி நீர் வெளியேறும். அந்த நேரத்தில் தான், குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுகிறது.
'இதுபோன்ற நேரங்களில் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
இது குறித்து, உழவர் சிந்தனை பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக நீர் செறிவூட்டும் பணி மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, பவானி ஆற்று நீர் வரத்தை பொறுத்து தான், நீர் செறிவூட்டல் பணி நடக்கிறது.
இடைபட்ட நாட்களில், திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை சரி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், குளம், குட்டைகளுக்கு நீர் செல்வது தடைபடுகிறது.
உதாரணமாக கடந்தாண்டு, அவிநாசி, சேவூர் குளத்துக்கு நீர் வினியோகிக்க பொருத்தப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அப்பகுதி, அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவித்து, 20 நாட்கள் கழித்து தான் பழுது சரி செய்யப்பட்டது.
இடைபட்ட நாட்களில் குளத்துக்கு செல்ல வேண்டிய நீர் தடைபட்டது. எனவே, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், நீர் செறிவூட்டப்படும் நேரத்தில் மட்டுமாவது, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

