/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல கூட்டத்தில் பிரச்னையை பட்டியலிட்டு அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் 'தர்ணா'
/
மண்டல கூட்டத்தில் பிரச்னையை பட்டியலிட்டு அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் 'தர்ணா'
மண்டல கூட்டத்தில் பிரச்னையை பட்டியலிட்டு அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் 'தர்ணா'
மண்டல கூட்டத்தில் பிரச்னையை பட்டியலிட்டு அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் 'தர்ணா'
ADDED : ஜூலை 10, 2025 11:29 PM

அனுப்பர்பாளையம்; மாநகராட்சி முதலாம் மண்டல கூட்டத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும், துாய்மை பணி பிரச்னை குறித்து, இ.கம்யூ., கவுன்சிலர் செல்வராஜ், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
'குப்பை எடுக்க போதிய ஆட்கள் வருவதில்லை. தெரு விளக்கு போதிய பராமரிப்பு இல்லை. அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வதில்லை. நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது,' என மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ கவுன்சிலர்களும் தரையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,), ''இவர்கள் சபையை நடத்தவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். எங்களுக்கு வேலை முழுமையாக நடக்கிறது. கூட்டத்தை நடத்த விடுங்கள். கோஷம் போட்டால் எப்படி பேசுவது? சபையை விட்டு வெளி நடப்பு செய்வதுதான் சரியான முறை,'' என்றார்.
இதனால் ரவிச்சந்திரனுக்கும் அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே, உதவி கமிஷனர், 'உங்கள் பிரச்னை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதை தொடர்ந்து, அ.தி.மு.க., பா.ஜ கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளி நடப்பு செய்தனர்.
அதன்பின், நாகராஜ் (ம.தி.மு.க.,) பேசுகையில், ''குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அதனால் டேங்கை சுற்றி சுவர் அமைத்து கேமரா பொருத்தி காவலாளி நியமிக்க வேண்டும். குப்பை வண்டி பேட்டரி அடிக்கடி பழுதாகிறது. மாற்ற வேண்டும்,'' என்றார்.
உஷாரான இ.கம்யூ., கவுன்சிலர்
கூட்டத்தில் துப்புரவு பணியை கண்டித்து இ.கம்யூ., கவுன்சிலர் செல்வராஜ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, தரையில் அமர்ந்து இருந்த இ.கம்யூ., கவுன்சிலர் செல்வராஜ், 'இவர்களுடன் சேர்ந்து நாமும் போராட்டத்தில் ஈடுபட்டதாக வந்துவிடக்கூடாது,' என எழுந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.