ADDED : நவ 09, 2025 12:13 AM

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து பேசியதாவது:
தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் நடக்கவுள்ள தேர்தலில் மிகவும் இன்றியமையாதது. இப்பணியில் பூத்கமிட்டியினரும், நிர்வாகிகளும் விழிப்புணர்வோடு பங்கேற்று தங்கள் பகுதியில் அனைத்து வாக்காளர்களும் இதில் கட்டாயம் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டியலில் உரிய நபர்கள் உள்ளனரா, யாரேனும் விடுபட்டுள்ளனரா என்பதை முறையாக கண்காணிக்க வேண்டும்.
இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட, பல வரலாறுகளை படைத்த கட்சி.
வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக்கான உழைப்பை தர தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் உட்பட நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், பூத் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

