/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணை நீர் மட்டம் சரிவு
/
அமராவதி அணை நீர் மட்டம் சரிவு
ADDED : மார் 13, 2026 05:59 AM

உடுமலை: உடுமலை அமராவதி அணை நீர் மட்டம் சரிந்துள்ளதால், கோடை காலத்தில், இரு மாவட்ட குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும், ஆற்றின் வழியோரத்திலுள்ள, நுாற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
நடப்பு ஆண்டில், தென் மேற்கு பருவ மழையால், கடந்த, ஜூன் 16ல் அணை நிரம்பி, 4 மாதங்கள் வரை, 6 டி.எம்.சி., வரை உபரியாக நீர் வெளியேற்றப்பட்டாலும், பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், குளங்களுக்கு வழங்கப்பட்டது.
நடப்பாண்டு, பாசனம், ஜூன், 6ல் துவங்கி, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, குறுவை, சம்பா பருவத்தில் நெல் சாகுபடிக்கும், பழைய ஆயக்கட்டு பாசனம் வலது கரை கால்வாய்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும் நீர் வழங்கப்பட்டு, நேற்று முன்தினம் பாசனம் நிறைவு செய்யப்பட்டது.
நடப்பாண்டு வட கிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில், பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்டதால், அணை நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 39.01 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 696.97 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 15 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் ஏற்கெனவே, 15 அடி வரை, சேறும், சகதியுமாக உள்ளதால், பயன்படுத்த முடியும் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.
இதனால், வரும் கோடை காலத்தில், வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பெரும் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. கோடை மழை பெய்தால்மட்டுமே சமாளிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

