/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழைய, புதிய ஆயக்கட்டுக்கு பாசன நீரை நீட்டிக்கணும்! அமராவதி விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்
/
பழைய, புதிய ஆயக்கட்டுக்கு பாசன நீரை நீட்டிக்கணும்! அமராவதி விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்
பழைய, புதிய ஆயக்கட்டுக்கு பாசன நீரை நீட்டிக்கணும்! அமராவதி விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்
பழைய, புதிய ஆயக்கட்டுக்கு பாசன நீரை நீட்டிக்கணும்! அமராவதி விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : பிப் 11, 2025 11:37 PM

உடுமலை : அமராவதி பாசன பகுதிகளில், நிலைப்பயிர்களை காக்கும் வகையில், அணையிலிருந்து கூடுதல் நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும், என பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன், 24ல் தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, நவ., 6 வரை தண்ணீர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்குக்காக, டிச., 6 முதல், பிப்., 24 வரை, 80 நாட்களில், 41 நாட்கள் தண்ணீர் திறப்பு, 39 நாட்கள் அடைப்பு என்ற சுற்றுக்கள் அடிப்படையில், தகுந்த இடைவெளி விட்டு, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 300 கன அடி வீதம், 1,062.72 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு அனுமதியளித்துள்ளது.
சம்பா நெல் சாகுபடிக்கு, 120 நாட்கள் நீர் தேவை உள்ள நிலையில், 80 நாட்கள் மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது.
இதனால், தற்போது பழைய ஆயக்கட்டு பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்களை காப்பாற்ற, மேலும் கூடுதலாக, ஏப்., மாதம் வரை நீர் வழங்க வேண்டும், என பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பயிர்கள் பாதிப்பு
அதே போல், பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வாயிலாக பாசன வசதி பெறும், 21,867 ஏக்கர் நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, செப்.,28 முதல், பிப்.,9 வரை நீர் வழங்க அரசு அனுமதியளித்துள்ளது.
நீர் திறப்பை தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்டது.
சீதோஷ்ண நிலை மாற்றம்,இலை கருகல், வேர் அழுகல் நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், நடவு செய்த ஒரு மாதத்தில், வேடபட்டி, குமரலிங்கம், ஜோத்தம்பட்டி என புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், கடந்த நவ., - டிச., மாதங்களில் வளர்ந்த நெற் பயிர்கள் கருகின.
உரிய ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
பல ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் பாதித்த நிலையில், அவற்றை அழித்த விவசாயிகள் மீண்டும் உழவு செய்து, நாற்றங்கால் அமைத்து, மீண்டும் நெற் பயிர் சாகுபடி மேற்கொண்டனர்.
தற்போது, அவை நிலைப்பயிர்களாக உள்ள நிலையில், அவற்றை காப்பாற்ற, சாகுபடிக்கு நீர் திறப்பை நீடிக்க வேண்டும். விவசாயிகள் சங்கம் சார்பில், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, மார்ச் இறுதி வரை, அமராவதி அணையிலிருந்து நீர் வழங்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
அணையில் நீர் இருப்பு திருப்தியாக உள்ள நிலையில், பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, கூடுதல் காலம் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது: புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, பிப்., 9ல், பாசனத்திற்கு நீர் திறப்பு நிறைவு பெற்ற நிலையில், இம்மாத இறுதி வரை நீர் வழங்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு கூடுதல் காலம் நீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதால், அணை நீர் இருப்பு, வரத்தை கணக்கிட்டு, விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், அரசு அனுமதி பெற்று நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அணை நீர்மட்டம்
அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 71.16 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 2,480.79 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 21 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக, வினாடிக்கு, 765 கனஅடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டிருந்தது.